திருச்சி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ. 492 கோடி ஒதுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்தப் பணிகளை அமைச்சர் கே. என். நேரு இன்று ஆய்வு செய்தார். இதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் எங்கும் இல்லாத வசதிகள் அனைத்தும் திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்தில் இருக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பஞ்சப்பூரில் மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில், குளிரூட்டப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் 120 எண்ணிக்கையில் புறநகர் பேருந்து நிறுத்த தடங்களும், 141 எண்ணிக்கையில் நீண்ட நேர பேருந்து நிறுத்த தடங்களும், 84 எண்ணிக்கையில் குறைந்த நேர நிறுத்த தடங்களும், 56 எண்ணிக்கையில் நகரப் பேருந்து நிறுத்த தடங்களும் என 401 எண்ணிக்கையில் பேருந்து நிறுத்த தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், மக்கள் பயன்பாட்டிற்காக 78 எண்ணிக்கையில் கடைகள், 216 எண்ணிக்கையில் நான்கு சக்கர வாகன நிறுத்தங்கள்,1935 எண்ணிக்கையில் இரண்டு சக்கர வாகன நிறுத்தங்கள்,100 எண்ணிக்கையில் ஆட்டோ ரிக்க்ஷா நிறுத்தங்கள்,12 எண்ணிக்கையில் மின் தூக்கிகள் மற்றும் நகரும் படிகட்டுகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி மேலும் பல்வேறு வசதிகளும் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கான பணிகள் அனைத்தும் நிறைவடையும் நிலையில் உள்ளன. இந்த பேருந்து முனையத்தை முதலமைச்சர் ஸ்டாலின், வரும் மே 9-ஆம் தேதி திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறார்" என்று அவர் தெரிவித்தார். அமைச்சர் கே. என். நேருவின் இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் காமினி, மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வே. சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தி - க. சண்முகவடிவேல்