தி.மு.க முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என். நேருவும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் ‘கீரியும் – பாம்பும்’ போல என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் மணப்பறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் கே.என். நேரு பெயர் மிஸ்ஸிங் ஆனதால் திருச்சி மாவட்ட தி.மு.க-வில் அதுவும் அமைச்சர் நேரு தரப்புக்கும் மகேஸ்வரப்புக்கும் உள்ள உட்பூசல்கள் வெட்ட வெளிச்சமானது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் கால்நடை சந்தைக்கு அருகே 5-வது வார்டில் மணப்பாறை சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9 லட்சத்தில் ஆழ்துளை கிணறு, மின்மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த 19-ம் தேதி திறந்து வைத்தார். இதற்காக நகராட்சி சார்பில் அங்கு அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நகராட்சி தலைவர் கீதா மைக்கல் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால், அந்தத் துறையின் அமைச்சரான கே.என்.நேருவின் பெயர் இடம் பெறவில்லை.
இந்த விவகாரம், அப்பகுதி தி.மு.க-வினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து நகராட்சி நிர்வாக துறை உயர்மட்ட அதிகாரிகள் வரை தகவல்கள் சென்றது.
இதைத்தொடர்ந்து நீர் தொட்டி அருகே வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு உடனடியாக அகற்றப்பட்டதுடன், பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி மணப்பாறை நகராட்சி பொறியாளர் விஜய் கார்த்திக் நாகப்பட்டினத்துக்கும், நகராட்சி பணிகள் மேற்பார்வையாளர் ராஜேஷ் திருத்துறைப்பூண்டிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மணப்பாறை நகரப் பகுதி, தி.மு.க-வில் தெற்கு மாவட்டத்தில் உள்ளது என்பதும், அதன் மாவட்டச் செயலாளராக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்தி: க. சண்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”