கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நேரு கூறியுள்ளார்.
Advertisment
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்ற சாலை மற்றும் பெண்கள் கல்லூரி சாலை போன்ற பல்வேறு பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை விரிவாக்க பணிகள் போன்ற திட்டங்கள் திறப்பு விழா நாகர்கோவிலில் இன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 லட்சத்து 90 ஆயிரம் மக்கள் பயன்பஃபும் வகையில் 296 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர், சாலை போன்ற பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தமிழக முதல்வர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக 400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் குளங்கள் புனரமைப்பு மற்றும் குடிநீர் திட்ட பணிகள் என எந்த கோரிக்கையாக இருந்தாலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அதனை பொதுமக்களுக்காக நிறைவேற்றி தருவார் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் மேயர் மகேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்வில் இருந்து அமைச்சர் புறப்பட்ட சில நொடிகளில் தேசிய கீதம் ஒலித்தது. இதைக் கேட்ட அமைச்சர் நேரு காரில் இருந்து உடனே இறங்கி நின்று தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தினார்.
அவருடன் பயணித்த அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ்,கிள்ளியூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.ராஜேஷ் குமார் ஆகியோரும் அமைச்சருடன் நின்று தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தினர்.
இதனை கண்ட பொது மக்களும் சாலையில் நின்றவாறு தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.
செய்தி: த.இ.தாகூர், கன்னியாகுமரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil