திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 'ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை' நிகழ்வை அமைச்சர் கே.என். நேரு இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு முக்கிய தகவல்களை கூறினார்.
திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு, மே 9 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினால் திறக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம், வரும் ஜூலை 16 ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அமைச்சர் நேரு தெரிவித்தார். "மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் இந்தப் பேருந்து முனையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பேருந்து முனையம் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்த சில நாட்களில் அனைத்து கடைகளும் இயங்கத் தொடங்கும்" என்று அவர் கூறினார்.
சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் வழக்கம் போல் செயல்பாட்டில் இருக்கும் என்றும், தனியார் பேருந்துகள் விருப்பப்பட்டால் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் வரை வரலாம் என்றும் அமைச்சர் விளக்கமளித்தார். "மக்கள் முழுமையாக பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை பயன்படுத்த தொடங்கும் போது தனியார் பேருந்துகளும் அங்கு வந்துவிடும்" என்று அவர் தெரிவித்தார்.
அரியமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்கில் இருந்து பிளாஸ்டிக் குப்பைகளை தனியாகப் பிரித்து அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் நேரு குறிப்பிட்டார். "ஏற்கனவே பிளாஸ்டிக்கை உரமாக மாற்றினோம், சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அங்கிருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்டிக் அனுப்பப்பட்டது. தற்பொழுது அந்த பிளாஸ்டிகை சாலை அமைப்பது உள்ளிட்ட வேறு பணிகளுக்குப் பயன்படுத்தலாமா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தாலும், குப்பைகளை வேறு எங்கும் கொட்ட முடியாத சூழலில் அரியமங்கலம் குப்பை கிடங்கிலேயே கொட்டி வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தி.மு.க அரசு தான் செயல்படுத்தியது என்றும், மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அந்த திட்டத்தை நிறுத்த வாய்ப்பில்லை என்றும் அமைச்சர் நேரு தெளிவுபடுத்தினார்.
உள்ளாட்சி அமைப்புகளை கலைக்க பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக பரவும் தகவலில் உண்மை இல்லை என்றும், "நாங்கள் ஏற்படுத்திய அமைப்பை நாங்களே எப்படி கலைப்போம்" என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
இந்த நிகழ்வின்போது திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.