திருச்சி -மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் பல்வகைப் பயன்பாட்டு மையம் என ரூ.349.98 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (அக்டோபர் 10) தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்க ரூ.349.98 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கி உள்ளது. அடுத்த ஆண்டு நவம்பரில் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும். நகராட்சித்துறை சார்பில் திருச்சி மாவட்டத்தில் 1536 நலத்திட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. மாநகரில் 406 கிலோ மீட்டருக்கு 200 கிலோ மீட்டருக்கும் மேல் பல்வேறு சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு இருக்கின்றது.

அண்ணா சாலை முதல் ஜங்சன் வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் பணிகள் நடைபெற்றது. அதேபோல் காவிரி பாலம் முதல் பெள்ளாச்சி சாலை வரை உயர்மட்ட சாலை அமைக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தலைமை தபால் நிலையம் முதல் நீதிமன்றம் வரை உயர்மட்ட பாலம் அமைக்கவும் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவைகளுக்கு டெண்டர் விடப்பட்டு உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் துவங்கும். நகர்பகுதிகளில் சாலை அமைக்கும் திட்டம் மழையின் காரணமாக சில இடங்களில் தாமதம் ஏற்படுவது உண்மை தான்.
திருச்சி காவிரி பாலம் பணிகள் தாமதமாவதற்கு கடந்த காலத்தில் பாலம் உடைக்கப்பட்டுள்ளது. காவிரி பாலம் சாலை முற்றிலும் பழுதடைந்திருக்கிறது. இதனால் பராமரிப்பு பணிகளை கவனமாக செய்ய வேண்டி உள்ளது. 3 மாதங்களில் பணிகள் முடிவடையும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா காலத்திற்கு பிறகு ஐ.டி.நிறுவனங்கள் திருச்சிக்கு வரத்தொடங்கி உள்ளன. ஐ.டி.பார்க் அமைப்பது தொடர்பான கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்” என்று கூறினர்.
சாயம் போகாத கட்சி தி.மு.க
தொடர்ந்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “10 வருடம் அ.தி.மு.க ஆட்சி நடந்தது. இங்க என்ன செஞ்சிருக்காங்கன்னு நீங்களே சொல்லுங்க. தி.மு.க ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் திருச்சிக்கு மட்டும் சுமார் 5000 கோடி ரூபாய்க்கு மேல் நலத்திட்டங்களுக்கான நிதியை முதல்வர் ஒதுக்கியிருக்கிறார். வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தி.மு.கவின் சாயமெல்லாம் வெளுக்காது. அ.தி.மு.க சாயம் தான் வெளுக்கும். சாயம் போகாத கட்சி தான் தி.மு.க” என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தர பாண்டியன், செ.ஸ்டாலின்குமார், துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளுக்கு கடந்த மூன்று மாதத்திற்கு முன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“