மு.க. ஸ்டாலினின் வெற்றி என்பது இந்த திருச்சியில் இருந்து தான் ஆரம்பிக்கிறது; நிச்சயம் நம்முடைய தளபதி மீண்டும் முதல்வர் ஆவார் என்று அமைச்சர் கே என் நேரு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் உறுதி கூறியுள்ளார்.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: வரும் 23ம் தேதி திருச்சிக்கு வருகை தரும் துணை முதலமைச்சரும் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சரும், முதன்மை செயலாளருமான கே.என் நேரு தலைமையில் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கழகத்தினர் அனைவரும் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளிப்பது.
துறையூரில் நடைபெறும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உருவ சிலை திறப்பு விழா நிகழ்ச்சியிலும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு புதிய அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியிலும் கழக நிர்வாகிகள், முன்னோடிகள், செயல்வீரர்கள் பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பிப்பது, வரும் 27-ம்தேதி பிறந்தநாள் காணும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு அன்றைய தினம் மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது, தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவிற்பிற்கிணங்க வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி மற்றும் தேர்தல் பணிகளில் கழகத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றிக்கு அயராது பாடுபடுவது என உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர், அமைச்சர் கே.என் நேரு பேசியதாவது: திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்ற வேண்டும். எனவே அதற்கு நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். திருச்சி மாவட்டத்தில் விரைவில் அனைத்து தொகுதிகளிலும் தலைவரின் உருவ சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கலைஞர் தான் நம் அனைவரையும் உருவாக்கியவர், கலைஞர் தான் நம்மை ஆளாக்கியவர், கலைஞர் தான் நம்மை வளர்த்து எடுத்தவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இன்றைய நிலையில் தளபதியின் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து குறைகளை சொல்லி அடுத்து நாங்கள் தான் என்று பலர் பேசி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் தலைவர் தளபதி தான் முதல்வராக ஆட்சி பொறுப்பில் ஏறுவார். இன்று அனேகர் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட சிலர் அடுத்த முதல்வர் தளபதி தான் என்று கூறுகிறார்கள்.
2026-ம் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக துணை முதலமைச்சர் திருச்சிக்கு வருகை தந்து இளைஞர் அணி கூட்டத்தில் பங்கேற்று, புதிய நூலகத்தை திறந்து வைத்து, கலைஞரின் உருவ சிலையை திறந்து வைத்து சிறப்பிக்க உள்ளார். எனவே தளபதியின் வெற்றி என்பது இந்த திருச்சியில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. நிச்சயம் நம்முடைய தளபதி மீண்டும் முதல்வர் ஆவார் எனப் பேசினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.