தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் கணக்கு அடையாளம் தெரியாத நபர்களால் முடக்கப்பட்டுள்ளது. ப்ளு டிக் உடன் கூடிய அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா குறித்த தகவல்கள் பதிவிடப்பட்டுள்ளன. அமைச்சரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது குறித்து தி.மு.க ஐடி விங் சார்பில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் கே. என். நேருவின் ட்விட்டர் பக்கம் நேற்று இரவு திடீரென ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 2 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்ட K.N.NEHRU (@KN_NEHRU) என்ற அவரது அதிகாரப்பூர்வ பக்கம் முடக்கப்பட்டு நாசா குறித்த தகவல்கள் பதிவிடப்பட்டு ரீ ட்விட் செய்யப்பட்டுள்ளது.

தனது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது குறித்து அமைச்சர் கே.என்நேரு மற்றொரு சமூக வலைதளமான பேஸ்புக்கில் தெரிவித்தார். அதில், எனது ட்விட்டர் பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. ஹேக் செய்யப்பட்ட பக்கத்தை மீட்கும் முயற்சியில் தொழில்நுட்ப குழு ஈடுபட்டுள்ளது. ட்விட்டர் பக்கம் மீட்கப்பட்டவுடன் அது குறித்து தெரிவிக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.

அமைச்சரின் ட்விட்டர் பக்க ப்ரொபைலில் (Dp) நாசா விஞ்ஞானி படம் வைக்கப்பட்டு, நாசாவின் புதிய அப்டேட்டுகள் வெளியிடும் பக்கம் என்று சுயவிவரக் குறிப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் நேருவின் டவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது குறித்து ட்விட்டர் நிறுவனத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தி.மு.க தகவல் தொழில்நுட்பப்பிரிவு மாநில செயலாளர் டி.ஆர்.பி ராஜா எம்.எல்.ஏ தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil