பல்கலைக்கழக மானியக் குழுவின் 2025-ஆம் ஆண்டுக்கான வரைவு விதிமுறைகளை திரும்பப்பெற வேண்டும் என பா.ஜ.க-வை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநருக்கு அதிகப்படியான அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும், இது கூட்டாட்சிக்கு எதிராக இருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘UGC draft rules (on picking V-Cs etc) are dictatorial… destroys federalism’: Tamil Nadu Education Minister
இந்த விவகாரம் தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தனது கருத்துகளை தெரிவித்துக் கொண்டார். அதன்படி, "யு.ஜி.சி-யின் விதிமுறைகள் திரும்பப்பெறா விட்டால் தி.மு.க சட்டரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடும். மக்களும் இந்த விதிமுறைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவார்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிமுறைகளை தமிழ்நாடு எதிர்ப்பது ஏன்?
உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கான இடஒதுக்கீடு, முதல் தலைமுறை பட்டதாரிகளின் கல்விக்கான செலவை தமிழக அரசு ஏற்பது, நுழைவுத் தேர்வுகளைத் தடை செய்தல் போன்ற அனைத்தும் உயர்கல்வியில் தமிழகத்தின் நல்ல செயல்பாட்டிற்கு பங்களித்தன. இவை அனைத்தும் ஒரே நாள் இரவில் அரங்கேறியது அல்ல. இந்த சூழலில் தான் யு.ஜி.சி-யின் புதிய விதிமுறைகள், தமிழகம் அடைந்துள்ள முன்னேற்றங்களுக்கு எதிராக அமைவதாக பார்க்கப்படுகிறது. யு.ஜி.சி-யின் விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்பது உண்மை தான். ஆனால், இந்த விதிகளை திணிப்பது தவறு எனக் கூறப்படுகிறது.
யு.ஜி.சி-யின் புதிய விதிகளில் சர்ச்சைக்குரியதாக கருதப்படுபவை எவை?
துணைவேந்தரை தேர்வு செய்ய ஏற்கனவே உள்ள மூன்று பேர் கொண்ட குழுவிற்கு கூடுதல் உறுப்பினரை வழங்குவதாகவும், இந்த உறுப்பினர் ஆளுநரால் பரிந்துரைக்கப்படுவார் என்றும் யு.ஜி.சி கூறுகிறது. இதனை வளர்ச்சிக்கான ஒரு முட்டுக்கட்டையாக தமிழ்நாடு அரசு கருதுகிறது. ஆளுநருக்கு அதிகப்படியான அதிகாரங்களை வழங்க யு.ஜி.சி முயல்வதாக கூறப்படுகிறது.
மற்றொருபுறம், பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம் அல்லது எம்.ஏ, எம்.எஸ்.சி, எம்.காம் போன்ற படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வுகளை யு.ஜி.சி முன்மொழிந்துள்ளது. ஒரு மாநிலத்தின் முறையான கட்டமைப்பை உடைக்கும் வழிகளாக இந்த புதிய விதிகள் பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் பின்பற்றப்பட்டு வரும் பாடத்திட்டம், உயர்கல்வியை மேம்படுத்தும் என்றும், யு.ஜி.சி-யின் இந்த கொள்கைகள் மாணவர்களின் பாடத்திட்டங்களுக்கு எதிராக அமையும் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. இது ஜனநாயகத்திற்கு எதிரான சர்வாதிகாரமாக பார்க்கப்படுகிறது. இந்த விதிமுறைகள் கூட்டாட்சிக்கு எதிராக இருப்பதால், தமிழ்நாடு எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி ஆளும் (தி.மு.க) மாநிலம் என்பதால் யு.ஜி.சி-யின் புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக சிலர் கூறுகின்றனர்
தமிழகம், யு.ஜி.சி-க்கு எதிரானது அல்ல என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துறையில் வல்லுநர்களின் கருத்துகளுக்கு அரசு மதிப்பளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தான் யு.ஜி.சி-யின் புதிய விதிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் கல்வி முறை நாட்டின் பிற பகுதிகளிலிருந்து எவ்வளவு வித்தியாசமானது?
உயர்கல்வியைப் பொறுத்த வரையில், மாநிலத்தின் தற்போதைய பாடத்திட்டம் வலுவாகவும், மாணவர்களை சரியான திசையில் அழைத்துச் செல்லும் வகையிலும் உள்ளது. அதனால் தான், அண்ணா பல்கலைக்கழகம் போன்ற அனைத்து பல்கலைக்கழகங்களும் சிறப்பாகச் செயல்படுகின்றன. உயர்கல்வி என்பது கலை மற்றும் அறிவியல் அல்லது பொறியியல் மட்டும் அல்ல. மருத்துவத்தில் கூட தமிழகம் உயர் தரத்தில் உள்ளது. அதற்குக் காரணம், அடிப்படைக் கல்விக் கட்டமைப்பு சரியாக இருப்பது தான்.
யு.ஜி.சி-யின் வேறு எந்தக் கொள்கைக்கு தமிழ்நாடு எதிரானதா?
யு.ஜி.சி நம்மிடம் இருப்பதை விட சிறப்பான ஒன்றை கொடுத்தால் கண்டிப்பாக அரசு பின்பற்றும். ஆனால், யு.ஜி.சி முன்னேற்றம் என்ற பெயரில் பின்னோக்கி அழைத்துச் செல்லும் வகையில் விதிகளை விதித்து வருகிறது. மேலும், விதிகளை கடைபிடிக்காவிட்டால் இளங்கலை படிப்புகளை தரமாட்டோம் என்று அச்சுறுத்துகிறது. இது சர்வாதிகாரத்தனமானது. சட்டசபையில் கூட, பா.ஜ.க-வைத் தவிர அனைத்துக் கட்சிகளும் வரைவு அறிவிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உதவினர். பா.ஜ.க வெளிநடப்பு செய்தது. இது, பா.ஜ.க-வின் கீழ் யு.ஜி.சி உள்ளதா என்ற சந்தேகத்திற்கு இடமளிக்கிறது.
உயர்கல்வியில் ஆளுநரின் பங்கை தமிழகம் ஏன் எதிர்க்கிறது?
தமிழகத்தில், துணை வேந்தர்கள் நியமனம், அதற்கென ஒரு குழுவை நியமிப்பது உள்ளிட்ட அனைத்தையும் அரசு செய்கிறது. ஆனால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இன்று, பல பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் இல்லாத நிலை உள்ளது. ஆளுநர் தடையை ஏற்படுத்துகிறார். அதனால் என்ன செய்யலாம் என்று சட்ட வல்லுநர்கள் உள்ளிட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அவர்களின் ஆலோசனைப்படி நடவடிக்கை எடுத்து செயல்பட திட்டமிட்டுள்ளோம். ஆனால், இந்த போக்கு தொடர்ந்தால், மாநிலத்தின் கல்வித்துறை பாதிக்கும் என்ற அச்சம் மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் மத்தியில் உள்ளது. இதை மத்திய அரசு சரி செய்ய வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.