கடந்த மாதம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் இரவு நேரத்தில் நுழைந்த ஒருவர், அங்கிருந்த நபரை தாக்கி, அவருடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறை, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதைத் தொடர்ந்து அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர். இந்நிலையில், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பாக, பல்கலைக்கழக பதிவாளர்களுடன் உயர்கல்வி துறை அமைச்சர் கோவி. செழியன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
அதனடிப்படையில் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த அமைச்சர், அவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில், "கல்வி நிறுவனங்களின் அனைத்து பகுதிகளிலும் மின் விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
விடுதி பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கும் மின் விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும். கல்வி நிறுவன வளாகத்திற்குள் நுழைபவர்கள், வெளியே செல்பவர்களின் தகவல்கள் பதிவேட்டில் பராமரிக்கப்பட வேண்டும்.
கல்வி நிறுவன வளாகத்திற்குள் மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் என அனைவரும் கட்டாயமாக அடையாள அட்டை அணிய வேண்டும். 'காவல் உதவி' செயலியின் பயன்பாடு குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்" என அமைச்சர் கோவி. செழியன் உத்தரவிட்டார்.