சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ ராஜவர்மன் தன்னை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 6 மாத காலமாக கூலிப்படை வைத்து கொலை செய்துவிடுவதாக கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதால், அதிமுக தேர்தலை எந்த குழப்பமும் இல்லாம எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக கட்சியில் இ.பி.எஸ் – ஓ.பி.எஸ்-க்கு இடையே இருந்த முதல்வர் வேட்பாளர் போட்டிக்கு முடிவு கட்டப்பட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என்று இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் கூட்டாக அறிவித்தனர்.
அதிமுக தலைமையில் இருந்த உட்கட்சி பூசல் முடிவுக்கு வந்த நிலையில்தான், சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ ராஜவர்மன் தன்னை அமைச்சர் ஒருவர் 6 மாத காலமாக கூலிப்படை வைத்து கொலை செய்துவிடுவதாக கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதனால், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அதிமுகவில் உட்கட்சி பிரச்னை புகைந்து பற்றி எரியத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தொடர்பாக, விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆலோசனைக் கூட்டம் சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன் தலைமையில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாமல் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில்தான் சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ ராஜவர்மன் அப்படி ஒரு பரபரப்பான பேச்சை பேசியுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ ராஜவர்மன் பேசியதாவது, “நான் எந்தப் பதவியையும் எதிர்பார்த்து கட்சியில் இருந்தது இல்லை. அவர்கள் தான் பதவியில் இருக்க சொன்னார்கள். ஆனால், இப்போது கட்சி நிர்வாகிகள் முன்பே என்னை தரக்குறைவாக பேசுவதும் என்னை வெட்டி விடுவேன், குத்தி விடுவேன், கூலிப்படையை வைத்து உன்னை கொலை செய்துவிடுவேன் என்று அமைச்சரே (ராஜேந்திர பாலாஜி) 6 மாத காலமாக கொலை மிரட்டல் விடுத்து பேசி வருகிறார்.
கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு அதிமுக என்ற கட்சியின் வெற்றிக்கு நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும்.
நான் இருக்கும் இடத்திற்கு விசுவாசமாக இருப்பேன். என்னை இந்த சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு முதல்வரும் துணை முதல்வரும் மக்களுக்கு வேலை செய்யும் ஒரு வேலைக்காரனாக வைத்திருக்கிறார்கள். இங்கு வேலைக்காரனை இந்த வேலைக்காரனை பிடித்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லை என்றால் என்னை தூக்கி எறியுங்கள். நான் என்றுமே பொதுமக்களின் காலுக்கு செருப்பாக இருப்பேன்.” என்று பேசினார்
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சாத்தூரில் அமைச்சரின் அலுவலகத்தில் அதிமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ ராஜவர்மன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில், அமைச்சர் 6 மாதமாக கொலைமிரட்டல் விடுப்பதாக ராஜவர்மன் கூறியிருப்பது சாத்தூர் அதிமுகவில் புகைந்து கொண்டிருந்த உட்கட்சி பூசல் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் எம்.எல்.ஏ ராஜவர்மன் அணி என இரு பிரிவாக சாத்தூர் தொகுதியில் அதிமுகவினர் செயல்படுவதால் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook