பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சைகளையும் அதிரடியாக பேசுவதையும் வழக்கமாக்கிக்கொண்டார். கடந்த ஆண்டு நாங்குனேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, இஸ்லாமியர்களை புண்படும்படி பேசியதாக சர்ச்சையானது. இதையடுத்து, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அதிமுக இந்துக்களுக்கான கட்சி என்றும் முஸ்லிம் கட்சிகள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாகவும் பேசி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதனிடையே, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மனோடு மோதல் போக்கைக் கடைபிடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் பல தரப்பில் இருந்தும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பிலும் இருந்து குரல் எழுந்தன.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சர்ச்சையான நடவடிக்கைகள் அதிமுக தலைமைக்கும் முதல்வர் பழனிசாமிக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதனால், இனியும் ராஜேந்திர பாலாஜியின் போக்குக்கு கட்டுப்படுத்தாவிட்டால் நன்றாக இருக்கிறது என்று அதிமுக தலைமை ஆலோசித்ததாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
தலைமைக் கழக அறிவிப்பு #AIADMK pic.twitter.com/JKu4BHvR7g
— O Panneerselvam (@OfficeOfOPS) March 22, 2020
இது குறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணைமுதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான பழனிசாமி கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள அதிமுக அறிவிப்பில், “விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்” என்று அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பில், ராஜேந்திர பாலாஜியை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிப்பதற்கான காரணம் எதையும் குறிப்பிடவில்லை.