இலங்கை ராணுவத்துக்கு பால் வழங்குவதை தமிழக மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதால் இந்த திட்டத்தை முதல்வர் நிராகரித்தார் என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இலங்கை ராணுவத்திற்கு தினமும் 1 லட்சம் லிட்டர் ஆவின் பால் வழங்குவதற்கான வணிக ஒப்பந்த வேண்டுகோளை தமிழக அரசு நிராகரித்துள்ளது என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி “இங்குள்ள ஒரு தனியார் நிறுவனம் மூலம் இந்த திட்டம் அரசாங்கத்திற்கு வந்தது. ஆனால், லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்ற இலங்கை ராணுவத்திற்கு பால் வழங்குவதை தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதை நிராகரித்துள்ளார்.
இருப்பினும், தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் உள்ள பார்லர்களுக்கு பால் வழங்குவதற்கான மற்றொரு திட்டம் பரிசீலனையில் உள்ளது. சிங்களவர்கள் உட்பட இலங்கையின் பொது மக்களுக்கு அவின் பால் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். இந்த பார்லர்களுக்கு தினமும் ஒரு லட்சம் லிட்டர் வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.” என்று கூறினார்.
இதனிடையே பொதுமுடக்க காலத்தில் ஆவின் பால் கொள்முதல் கணிசமாக அதிகரித்துள்ளது என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின் கொள்முதல் ஒரு நாளைக்கு சுமார் 32 லட்சம் முதல் 35 லட்சம் லிட்டர் வரை இருந்தது. தற்போது 42 லட்சம் லிட்டர் வரை அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “தனியார் விற்பனையாளர்கள் பல பகுதிகளில் கடையை மூடிவிட்டனர். பொதுமுடக்க காலத்தில் அவர்கள் பால் வாங்குவதில்லை. இருப்பினும், ஆவின் அதிகாரிகளும் ஊழியர்களும் அனைத்து அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு விவசாயிகளிடமிருந்து தொடர்ந்து பால் வாங்குகிறார்கள். சென்னையில் ஒரு நாளைக்கு சுமார் 4 லட்சம் லிட்டர் நுகர்வு அதிகரித்த போதிலும், நாங்கள் இன்னும் 6 லட்சம் லிட்டர் அதிகப்படியான பாலைப் வாங்குகிறோம். பால் உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு பால் உபரியாக இருந்தாலும் பால் வாங்க நாங்கள் மறுக்கவில்லை” என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
மேலும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பால் பவுடர், பன்னீர் மற்றும் பிற துணை தயாரிப்புகளை தயாரிக்க உபரி பால் பயன்படுத்தப்படுகிறது என்று கூறினார். ஆவின் பன்னீருக்கு டெல்லியில் நல்ல தேவை இருக்கிறது. மருத்துவ அறிக்கைகள் புரதச்சத்து நிறைந்த பன்னீர் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் நெருக்கடி இருந்தபோதிலும், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூருக்கு பால் ஏற்றுமதி தொடர்கிறது. இது ஆவின் பாலின் உயர் தரத்தைக் காட்டுக்கிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.