/tamil-ie/media/media_files/uploads/2021/08/jan-ashirvadh-yatra-l-murugan.jpg)
மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் நேரடியாக கொண்டு செல்லும் வகையில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், மக்கள் ஆசி யாத்திரையை (ஜன் ஆசிா்வாத் யாத்ரா) இன்று (ஆகஸ்ட் 16) கோவையில் தொடங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், “பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையில் தலித் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 20 பேருக்கு அமைச்சரவையில் இடமளித்துள்ளார். எங்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் நாளில், சமூக நீதிக்காகப் போராடுவதாக பெருமை பேசுகின்ற காங்கிரஸ், திமுக மற்றும் கம்யூனிஸ்டுகள் போன்ற எதிர்க்கட்சிகள் எங்களை அறிமுகப்படுத்த அனுமதிக்காமல் சபையை முடக்கினார்கள் என்று எதிர்க்கட்சிகளை விமர்சித்தார்.
மூன்று நாள் மக்கள் ஆசி யாத்திரையை தொடங்கி வைத்துப் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக நீதி காவலர்கள் என்று கூறிக்கொண்டிருக்கும் கட்சிகள் அமைச்சரவையில் தலித்துகளையும் பழங்குடியினரையும் அமைச்சகத்தில் அல்லது அதிகாரத்தில் சேர்த்தார்களா? சமூக நீதியின் உண்மையான உணர்வை யார் காட்டினார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், “சமூக நீதியின் உண்மையான வெற்றியாளர் மோடி” என்று அவர் கூறினார்.
மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றபின் மக்களை சந்திக்கவே தமிழகத்தில் யாத்திரை மேற்கொள்கிறேன். நாடு முழுவதும் மக்கள் ஆசீர்வாத யாத்திரை நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றியே நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
உணர்ச்சிவசப்பட்டு பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஏழை அருந்ததியர் குடும்பத்தில் இருந்து வந்த என்னை பிரதமர் மோடி சமூக நீதியை நம்பியதால், அவர் என்ஹெச்ஆர்சி துணைத் தலைவர், பாஜக மாநிலத் தலைவர் மற்றும் இப்போது மத்திய அமைச்சர் பதவிக்கு உயர்த்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஓபிசி மசோதாவை நிறைவேற்றிய பெருமை பிரதமர் மோடி அரசுக்கு உண்டு என்று மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார்.
பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக சமூக நீதி கொள்கையை பின்பற்றுகிறதா என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், மறைந்த முதல்வரும் அதிமுக கட்சியைத் தொடங்கியவருமான எம்.ஜி.ஆர் சமூகநீதியை கண்டிப்பாக பின்பற்றினார் என்று கூறினார்.
பெட்ரோல் விலை உயர்வு குறித்து ஊடகங்களின் மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழக அரசு லிட்டருக்கு ரூ. 3 குறைத்து திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியை மட்டுமே அமல்படுத்துகிறது. மத்திய அரசு சர்வதேச விலைகளை கடைபிடிக்கிறது என்று கூறினார்.
கொங்குநாடு தனி மாநிலம் குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் எல்.முருகன், “தமிழ்நாட்டில் தனி கொங்குநாடு மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கை பற்றி அந்த பகுதி மக்களால்தான் முடிவு செய்யப்பட வேண்டும்” என்று கூறினார்.
நீலகிரி மற்றும் நாமக்கல்லில் மக்கள் ஆசி யாத்திரை நடைபெறுகிறது. இதில் கிராமப்புற ஏழைகளுக்கு எட்டு கோடி எரிவாயு இணைப்புகளை வழங்குவது போன்ற மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பாஜக முன்னிலைப்படுத்துகிறது.
இந்தியா முழுவதும் 44 அமைச்சர்கள் மற்றும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் மக்கள் ஆசி யாத்திரையில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அமைச்சர் முருகன் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.