தமிழகத்தில் ஆறு தமிழ் வழி மருத்துவக் கல்லூரிகள் அமைக்கவேண்டும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
"கடந்த ஆண்டு தமிழ் வழி மருத்துவக் கல்லூரி வேண்டும் என்கின்ற வகையில் கோரிக்கை வைக்கப்பட்டது. சென்னையில் அப்படி ஒரு மருத்துவமனை தொடங்கிட வேண்டும் என்கின்ற நோக்கத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர், தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் உள்ள 16 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்க கேட்டார்கள்.
தற்போது தமிழக முதல்வர் இந்த கோரிக்கை நிறைவேறுவதற்காக அரசுக்கு வலியுறுத்தி வருகிறார். இருப்பினும், தமிழகத்தில் எந்தெந்த மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரிகள் இல்லையோ அங்கெல்லாம் முதலில் இந்த கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் என்று திட்டமிடுகின்றோம்.
இப்போது ஏற்கனவே ஆறு மருத்துவக் கல்லூரிகள் வேண்டுமென்ற கோரிக்கை மத்திய அரசிடம் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் வேண்டும் என்கின்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அந்த கோரிக்கை பரிசீலனையில் இருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் டெல்லிக்கு சென்றபோது கூட தமிழக முதல்வரின் கருத்தை வலியுறுத்திவிட்டு வந்திருக்கிறோம். இந்த ஆறு மருத்துவக் கல்லூரிகளையும் அவர்கள் பரிசீலித்து ஒப்புதல் அளித்தபின்பு, சென்னையில் ஒரு புதிய தமிழ் வழி மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அதேநேரத்தில், அந்த கல்லூரியின் பாடப்புத்தகங்கள் தமிழ் வழியில் இருக்கவேண்டும் என்கின்ற வகையில் மூன்று மருத்துவ பேராசிரியர்களுக்கு மொழி பெயர்கின்ற பணியினை செய்து வருகிறோம். மிக விரைவில் அப்பாடப் புத்தகங்கள் தமிழக முதல்வரின் மூலம் வெளியிடப்படும்" என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil