மாணவி பாலியல் தொல்லை விவகாரத்தில் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, தண்டனை பெறப்பட்ட ஞானசேகரனுக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இன்றைய (ஜூன் 6) தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதன்படி, "ஞானசேகரன் என்னுடன் பேசியதாக அண்ணாமலை கூறவில்லை. சண்முகம் என்ற வட்டச் செயலாளர் என்னிடம் பேசியதாகவே அண்ணமலை கூறியுள்ளார். அண்ணாமலை பேசியதை முழுமையாக கேட்டவிட்டு அதன் பின்னர் என்னிடம் கேள்வி எழுப்புங்கள்.
ஞானசேகரனுக்கும், எனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று எல்லோருக்குமே தெரியும். இதுவரை என்னிடம் ஒரு முறை கூட தொலைபேசி வாயிலாக ஞானசேகரன் பேசியது கிடையாது. ஞானசேகரன், சைதை பகுதியைச் சேர்ந்தவன்.
மழை வெள்ளத்தின் போது நானும், துணை மேயர் மகேஷ் குமாரும், மற்ற அலுவலர்களும் பார்வையிட சென்றிருந்தோம். அப்போது, காலை சிற்றுண்டியை வாங்கி வந்த வட்டச் செயலாளர், ஞானசேகரனின் வீட்டின் அருகே சாப்பிட வைத்தார்.
அப்போது தான் ஞானசேகரன் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டான். அதை தவிர எங்கள் இருவருக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது. இந்த விவகாரத்தை தான் மற்றவர்கள் பெரிதுபடுத்தினர். இதையடுத்து, பாலியல் குற்றச்சாட்டு வழக்கை முழுமையாக விசாரித்து, 30 ஆண்டுகள் தண்டனை என்பதை ஞானசேகரனுக்கு வழங்கியுள்ளனர்.
இந்த விசாரணையில் நீதிமன்றமே காவல்துறையின் நடவடிக்கையை பாராட்டியுள்ளது. இந்த சூழலில், சண்முகம் என்ற வட்டச் செயலாளர் என்னுடன் தொலைபேசியில் பேசியதாக அண்ணாமலை கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்கு ஏற்கனவே நான் பதிலளித்து விட்டேன்.
மொத்தம் 83 வட்டச் செயலாளர்கள் என்னுடன் இருக்கின்றனர். முதியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாகவே, சம்பந்தப்பட்ட வட்டச் செயலாளர் எனக்கு போன் செய்தார். சண்முகம் என்னை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டதை கண்டறிய முடிந்த அண்ணாமலையால், அந்த தொலைபேசி உரையாடலில் நான் என்ன பேசினேன் என்பதையும் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அந்த தொலைபேசி உரையாடலையும் அண்ணாமலை வெளியிட்டால் நன்றாக இருக்கும்" என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.