தமிழ்நாட்டின் பிரபல திரைப்பட நடிகை நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனிற்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இதைத்தொடர்ந்து, நேற்று அவர்களுக்கு வாடகைத் தாயின் மூலமாக இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக பதிவேற்றிருந்தனர். இதனால், சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
"வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது விதிமுறைகளை மீறியதா இல்லையா என்பது விவகாரத்திற்குரியது. ஆனால், சட்டத்தில் ஒருவர் 21 வயதிலிருந்து 36 வயதிற்குள் இருந்தால், அவரது கருமுட்டைகளை பயன்படுத்தலாம். அதுவும் குறிப்பாக பெற்றோர்கள் அல்லது கணவரின் ஒப்புதலை பெற்று தரலாம் என்று சட்டத்தில் போடப்பட்டுள்ளது. அந்த வகையில் இம்முறை சாத்தியமே.

மருத்துவ சேவை இயக்குனரிடம் கூறி, அதில் இருக்கிற விதிமுறைகளின் படி நயன்தாரா-விக்னேஷ் சிவன் குழந்தை பெற்றெடுத்தார்களா என்பது பரிசீலிக்கப்படும்", என்று கூறுகிறார்.
மேலும், அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்படுவதை பற்றி பேசிய அவர், "இது சம்மந்தமாக தொடர்ச்சியாக பேசிக்கொண்டு இருக்கிறோம், 32 மருத்துவ கிடங்குகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. மருத்துவ கிடங்குகளில் இரண்டு வகையான மருந்துகள் மிகவும் அவசியமானது. அவசர தேவைக்கான மருந்துகள், மற்றும் சிறப்பு மருந்துகள். இரண்டு வகைகளும் 300க்கும் மேற்பட்டவை உள்ளன.
எந்த அளவிற்கு ஸ்டாக் இருக்கிறது என்கிற தகவல் தமிழக அரசு இணையத்தில் பதிவாகி இருக்கிறது. இதைப்பற்றி சந்தேகம் எழுந்தால் மாவட்டங்களில் இருக்கிற மருத்துவ கிடங்குகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளலாம். அரசியல் தலைவர்களுக்கு கூட இதில் ஐயம் இருந்தால் பரிசீலித்துக்கொள்ளலாம்.
மருந்துகிடங்கில் இருந்து மருத்துவமனைக்கு மருந்துகளை கொண்டுவரும் பொழுது பல சோதனைகள் நடைபெறும், அல்லது சுகாதார துறை அதிகாரிகளால் காலதாமதம் ஆகியிருக்கலாம்.
இந்த விவாகரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், நாளை காலை 11 மணியளவில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் இருக்கின்ற கூட்டரங்கில் தமிழ்நாடு முழுக்க இருக்கிற சுகாதாரத்துறையின் உயர் அதிகாரிகள், அனைத்து மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் பங்கேற்கும் கூட்டம் நடக்கவிருக்கிறது.
இந்த கூட்டத்தில், பருவ மழை தொடர்பாக நடத்தவேண்டிய விழிப்புணர்வு முகாம்கள், மழை கால சிறப்பு மருத்துவ முகாம்கள் ஆகியவற்றையும் கலந்துரையாட இருக்கிறோம்.
மேலும், எங்கேனும் மருந்து தட்டுப்பாடு தென்பட்டால்,104 என்கிற என்னை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அதற்கேற்ற நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்", என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil