கோவை சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ள இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 'இன்னுயிர் காப்போம்; நம்மை காக்கும் 48' திட்டத்திற்கான நவீன மருத்துவ கருவிகளை மருத்துவ நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்களை மருத்துவர்களிடம் ஒப்படைத்தார்.
மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:
“2021 டிசம்பர் 18ஆம் தேதி முதல்வர் துவங்கிய 'இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் 48' திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
கோவை இ எஸ் ஐ மருத்துவமனை, கடலூர், வேதாரண்யம், மேட்டுப்பாளையம் உட்பட இத்திட்டத்தை செயல்படுத்தி வரும் பல்வேறு மருத்துவமனைகளுக்காக 2 கோடியே 76 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.
கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கான 56 லட்சம் மதிப்பிலான நவீன மருத்துவ உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இத்திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 500 இடங்களை விபத்து நடக்கும் இடங்கள் என கண்டறியப்பட்டு, அதன் அருகே உள்ள 232 அரசு மருத்துவமனை உட்பட 679 மருத்துவமனைகளில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 923 பேர் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து விபத்திலிருந்து உயிர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 125 கோடியே 42 லட்சத்து 98 ஆயிரத்து 500 ரூபாய் நிதி செலவில் விபத்தில் பாதிக்கப்படும் உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகிறது
இத்திட்டத்தை மேலும் மெருகூட்டும் விதமாக அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையின் படி இன்று மருத்துவ உபகரணங்கள் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கோவையை பொருத்தவரை இங்குள்ள மருத்துவ கட்டுமானங்களை மேம்படுத்த முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். கோவை மாவட்டத்தில் 72 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் அமைத்திட அனுமதி பெறப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், குடிசை உள்ள இடங்களிலும் இவை செயல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 708 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. கோவையில் 72 மையங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் 500க்கும் மேற்பட்ட நல வாழ்வு மையங்களை தமிழக முதல்வர் சென்னையில் இருந்து திறந்து வைக்க உள்ளது.
மேலும், கோவை மணியக்காரன்பாளையம் பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மருத்துவ பாட நூல்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்வதற்கான பணிகளை தமிழக முதல்வர் தொடங்கி வைத்து பணிகள் நடைபெற்று வருகிறது. கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியை சேர்ந்த மருத்துவர்களும் மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது பெருமைக்குரிய விஷயமாகும். கடந்த மாதம் நடைபெற்ற சென்னை புத்தக திருவிழாவில் மொழிபெயர்க்கப்பட்ட ஐந்து மருத்துவ நூல்களை மாணவர்களிடம் முதல்வர் வழங்கினார். மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கான பாராட்டு விழா பிப்ரவரி 5ஆம் தேதி முதல்வர் தலைமையில் நடைபெற உள்ளது.
மேலும் பிப்ரவரி 3ஆம் தேதி மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணியானைகளை தமிழக முதல்வர் வழங்க உள்ளார்' எனவும்
குட்கா விற்பனை மீதான தடையை நீதிமன்றம் நீக்கியது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், குட்கா விற்பனை தடையை நீதிமன்றம் நீக்கி இருந்தாலும், தமிழக முதல்வர் போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டுள்ளார். எனவே பல்வேறு உணவுப் பொருட்களை விற்கும் மளிகை கடைகளில் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் குட்காவை விற்க வேண்டாம் என வணிகர் சங்க பிரதிநிதிகளுக்கு கோரிக்கையாக வைக்கின்றேன். மேலும், இதுகுறித்த மேல்முறையீடு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். தேவைப்பட்டால் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டத்திருத்தம் செய்யப்படும் என பதிலளித்தார்.
மேலும், 2025 ஆம் ஆண்டில் காசநோய் இல்லா தமிழகம், தொழுநோய் இல்லா தமிழகம் ஆகியவற்றினை உருவாக்குவதற்காக மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தவர், மலை கிராமங்களில் வாழும் மக்களுக்கான மருத்துவ பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்து தீர்வு காணப்பட்டு வருவதாகவும் கூறினார்.
செய்தி: பி. ரஹ்மான்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.