தென்காசியில் ரூ.9.02 கோடி செலவில் 16 புதிய மருத்துவ கட்டிடங்கள் கட்டப்பட்டு வெள்ளிக்கிழமை (11.04.2025) சுகாதாரத்துறை அமைச்சரால் திறந்து வைப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த அரசு நிகழ்ச்சிக்கு, ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்க வேண்டும் என்றும் அனைத்து மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படதாக ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையானது. மேலும், பங்குனி உத்திரம் அன்று யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது அனைவரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதாக அறிவுறுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ச்சிக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக ஆடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், இதை மாவட்ட சுகாதார அலுவலர் மறுத்துள்ளார்.
மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட இருந்தது. இந்தநிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“புதிய மருத்துவ கட்டிடங்கள் பணிகள் முடிவடைந்ததும் திறப்பு விழாவிற்கு காத்திருக்காமல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது வழக்கம். அந்தவகையில், கன்னியாகுமரியில் ரூ.7.35 கோடி மதிப்பில் 15 புதிய மருத்துவ கட்டிடங்களும், ஏப்ரல் 11-ம் தேதி தென்காசியில் ரூ.9.02 கோடி செலவில் 16 புதிய மருத்துவ கட்டிடங்களும் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட இருந்தது. இந்தநிலையில், இன்று ஊடகங்களில் ஒரு செய்தி ஒளிபரப்பானது. அதில் பங்குனி உத்திரம் தென்காசியில் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி, மருத்துவ கட்டிடங்கள் திறப்பு விழாவில் கலந்து கொள்ள முடியாது என்று கூறப்பட்டிருந்தது. எனவே, தென்காசி மாவட்டத்தில் நடைபெற இருந்த புதிய மருத்துவ கட்டிடங்கள் திறப்பு விழா வேறு ஒரு நாள் அறிவிக்கப்பட்டு நடைபெறும்.
இதேபோல, அரசு நிகழ்ச்சிகளுக்கு பணம் வசூலிக்கப்படுகிறது என்ற செய்தி பற்றிய உண்மைதன்மை அறிய பொது சுகாதாரத்துறை இயக்குநர், இணை இயக்குநர் தலைமையில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில் தவறு செய்தது உண்மை என கண்டறியப்பட்டால், தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த ஆடியோ குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், அரசு நிகழ்ச்சிக்கு பணம் வசூலிப்பதில்லை, சால்வை, புத்தகம் கூட எனக்கு வழங்கக்கூடாது, சிக்கனமாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறேன். இந்த ஆடியோ வெளியானதும் சென்னையில் இருந்து மருத்துவத் துறை இணை இயக்குநர் ஒருவரை அனுப்பி விசாரித்து, இந்த ஆடியோ வெளியிட்ட மருத்துவரின் குரல் யாருடையது, அரசு நிகழ்ச்சிக்கு பணம் வசூலிப்பதாக கூறப்படும் இந்த குற்றச்சாட்டு உண்மை என்று தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.