மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த 2 தினங்களாக கோவையில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் ஆய்வும் மேற்கொண்டார். இரவில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை அரசு மருத்துவமனையில் புதிய எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவியின் சேவையையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோவை அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் 72 நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்த மையங்களில் காலை 8-12 மணி வரையும், மாலை 4-8 மணி வரையும் மருத்துவ சேவை வழங்கப்படும். தடை செய்யப்பட்ட மாத்திரைகள் விற்பனை இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோவை அரசு மருத்துவமனைக்கு தினசரி சுமார் 4,500-க்கும் மேற்பட்டோர் வருகை தருகின்றனர் என்றார்.
தொடர்ந்து, யூடியூபர் இர்ஃபான் மனைவி பிரசவ வீடியோ விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இர்ஃபானுக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் ஒன்றும் கொலை குற்றம் செய்யவில்லை. இது ஒரு பெரிய விஷயமா" எனக் கேட்டு சென்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“