சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கான காய்ச்சல் விழிப்புணர்வு பயிற்சி முகாம் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்த நிகழ்ச்சியை இன்னொரு நாளைக்கு வைத்துக்கொள்ளலாம் என்று திடீரென நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் மா.சு திடீரென வெளியேறியதற்கு காரணம் என்ன?
சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கான காய்ச்சல் விழிப்புணர்வு பயிற்சி முகாம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் வெறுமனே 50 செவிலியர்களை மட்டுமே வைத்து காய்ச்சல் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடத்தியதால் கோபம் அடைந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பயிற்சி முகாமில் இருந்து வெளியேறினார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக இன்ஃபுளுயென்ஸா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் மருத்துமனைகளின் செவிலியர்களுக்கு காய்ச்சல் விழிப்புணர்வு பயிற்சிகளை வழங்கக்கூடிய முகாம், சென்னை எழுப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று (செப்டம்பர் 27) காலை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்கம் எழும்பூர் அரசு மருத்துவமனையில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் காய்ச்சல் விழிப்புணர்வு பயிற்சி முகாம் தொடக்க நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
தொடக்க நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே முடிந்திருந்த நிலையில், பயிற்சி முகாமில் பங்கேற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததால், கோபம் அடைந்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், அதிகாரிகளிடம் தனது அதிருப்தியைத் தெரிவித்தார். மேலும், இந்த நிகழ்ச்சியை இன்னொரு நாளைக்கும் வைத்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டு நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு வெளியேறினார்.
மேலும், இந்த நிகழ்ச்சி சரியான முறையில் ஒருங்கிணைக்கப்படவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் காட்டமாகப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த நிகழ்ச்சி சரியான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டால் மட்டுமே பங்கேற்பேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால், அங்கே அதிகாரிகள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"