கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்புகளுக்கு காரணம், சம்பவத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவமனைக்கு வரத் தயங்கியதும் உயிரிழப்புகளுக்கு காரணம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், கருணாபுரம் கிராமத்தில், மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிகை 52 ஆக உயர்ந்துள்ளது. 50-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமைச்சர்கள் மா. சுப்ரமணியன், எ.வ. வேலு, உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும், சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினர்.
அதே நேரத்தில், இந்த சம்பவத்துக்குப் பிறகு, தமிழ்நாடு அரசு கள்ளச்சாரய விற்பனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து இவ்வளவு பேர் உயிரிழப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது: “இந்த சம்பவத்திற்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவமனைக்கு வர தயங்கியதும் உயிரிழப்புகளுக்கு காரணம்; ஜிப்மர் மருத்துவமனையில் 8 பேர் நிலையாகவும், 9 பேர் ஆபத்தான நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்; ‘Omeprazole’ மாத்திரையின் கையிருப்பு 4 கோடி இருக்கும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு சரி அல்ல” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“