தி.மு.க தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்டாலின் 70-வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள், சமூக அமைப்பாளர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் என பல்வேறு துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தி.மு.க மூத்த தலைவரும், தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து அவருடனான பயணங்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், “40 ஆண்டுகளாக ஸ்டாலினுடன் பயணித்து கொண்டிருக்கிறோம். தன்னுடன் நல்ல நண்பர்களை சேர்த்து கொள்வதில் அவர் முன்மாதிரி. 1987-ம் ஆண்டு சைதாப்பேட்டை இளைஞர் அணி பொறுப்பாளர் பதவிக்கு நிர்வாகி நியமனம் செய்யப்பட வேண்டி இருந்தது.
அப்போதைய பகுதி செயலாளர் ஆர்.எஸ் ஸ்ரீதர் என் பெயரைப் பரிந்துரை செய்தார்.
பரிந்துரை கடிதத்தை வைத்துக் கொண்டு அவரே நேரில் சென்று அங்கிருந்த மக்களிடம் என்னை பற்றி விசாரித்தார். என் கழகப் பணிகள், குடும்ப பின்னணி என எல்லாவற்றையும் விசாரித்தார். அதன் பின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டேன். இப்படி நிர்வாகிகளை தேர்ந்ததெடுப்பதில் சிறந்தவர்.
அதேபோல் 8,9 ஆண்டுகளுக்கு முன் மாநிலம் முழுவதும் இளைஞர் அணிக்கு பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்ய வேண்டியிருந்தது. கிட்டதிட்ட 5,200 பொறுப்புகளுக்கு 1.15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தார். ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அவரே நேரில் சென்று விசாரித்து நிர்வாகிகளை நியமனம் செய்தார். அவர் மனிதாபமானி. அதற்கு எடுத்துக்காட்டாக உதவி எனக் கேட்டு தன்னிடம் வருபவர்களுக்கு உதவி செய்து அந்த உதவி அவர்களுக்கு சென்று சேர்ந்து விட்டதாக என்பதையும் கவனிப்பார்.
இது போன்று எந்த தலைவரும் செய்ய மாட்டார்கள். மேலும் சில வருடங்களுக்கு முன் ஐஐடி வளாகத்தில் எப்போதும் நடைபயிற்சி மேற்கொள்வார். அங்கு ஒரு மாற்றுத்திறனாளி சிறுவன் எப்போதும் ஸ்டாலினுக்கு வணக்கம் சொல்வார். ஒரு நாள் அந்த சிறுவன் அங்கு இல்லை. இதுகுறித்து விசாரித்து போது அந்த சிறுவன் இறந்துவிட்டான் எனத் தெரிந்தது. அப்போது அவர் வெளியூரில் இருந்தார். வெளியூரில் இருந்து திரும்பியதும் உடனடியாக அவர் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார். பின் சில நாட்களுக்கு அவர் அங்கு நடைப்பயணம் செய்வதை விட்டுவிட்டார். அங்கு சென்றால் அந்த சிறுவன் நியாபகம் வரும் என்று கூறி அங்கு அவர் நடைப்பயணம் செய்யவில்லை. நல் உள்ளம், மனிதாபிமானம் கொண்டவர்.
மேயராக இருந்த போதும், தற்போது முதல்வராக இருந்த போதும் பல்வேறு திட்டப் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வார். நிர்வாகத்தை தொடர்ந்து கண்காணித்து கொண்டே இருப்பார்” என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/