முதல்வர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் மாஃபா பாண்டியராஜன்; பின்னணி?

சென்னை ஆவடி மாநகராட்சி அலுவலகக் கட்டடத்துக்கு காமராஜர் பெயரைச் சூட்ட வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தமிழக முதல்வர் எடப்பாடி...

சென்னை ஆவடி மாநகராட்சி அலுவலகக் கட்டடத்துக்கு காமராஜர் பெயரைச் சூட்ட வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி போர்க்கொடி தூக்கியுள்ளது பற்றி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள ஆவடி, நகராட்சியாக இருந்தபோது நகராட்சி அலுவலக கட்டடத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டிருந்தது. பின்நாளில், ஆவடி பெருநகராட்சியாக மாற்றப்பட்டபோது, அந்த கட்டடத்துக்கு காமராஜர் பெயர் நீக்கப்பட்டு ஆவடி பெருநகராட்சி கட்டம் ஆனது. தற்போது ஆவடி மாநகராட்சியான நிலையில், ஆவடி மாநகராட்சி அலுவலக கட்டடத்துக்கு மீண்டும் பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என்று நாடார் அமைப்புகள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஆவடி மாநகராட்சி அலுவலக கட்டடத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் எழுதியுள்ள கடிதத்தில், பெருந்தலைவர் காமராஜர் பெயரால் அழைக்கப்பட்டுவந்த ஆவடி நகராட்சி கட்டடம் திமுக ஆட்சியில் பெயர் நீக்கப்பட்டு பெருநகராட்சி கட்டடம் என்று அழைக்கப்பட்டது. தற்போது ஆவடி 15வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மாநகராட்சி கட்டடம் என்றே அழைக்கப்படுகிறது. அதனால், ஆவடி மாநகராட்சி அலுவலக கட்டடத்துக்கு மீண்டும் காமராஜர் பெயரை சூட்டம் வேண்டும் என தனது ஆவடி தொகுதி மக்களின் பொதுவான கோரிக்கையாக இருந்துவருகிறது. எனவே இந்த கோரிக்கையை முதல்வர் பரிசீலனை செய்து பெருந்தலைவர் காம்ராஜர் பெயரை ஆவடி மாநகராட்சி கட்டடத்திற்கு சூட்ட ஆவன செய்யக் கோரியுள்ளார்.

தமிழ் வளர்ச்சித்துறை மாஃபா பாண்டியராஜன், முதல்வர் பழனிசாமியிடம் இந்த கோரிக்கையை முன்வைத்தபோது, இந்த கட்டடத்துக்கு காம்ராஜர் பெயர் சூட்டினால் மற்ற மாநகராட்சி கட்டடத்துக்கும் அவரவர் விருப்பப்படும் பெயரை வைக்க வேண்டும் என்பதால் இந்த கோரிக்கை சிக்கலானது என்று முதல்வர் பழனிசாமி நாசுக்காக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. முதல்வர் பழனிசாமி இந்த கோரிக்கையை மறுத்தாலும் மாஃபா பாண்டியராஜன் அதில் விடாப்பிடியாக உள்ளார். இதற்கு, மாஃபா பாண்டியராஜன் வஞ்சிக்கப்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது.

விஜயகாந்த் தேமுதிக தொடங்கியபோது முக்கியத் தலைவராக இருந்த மாஃபா பாண்டியராஜன் 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். அந்த தேர்தலில் தேமுதிக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. சட்டப்பேரவையில் விஜயகாந்த்துக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மாஃபா பாண்டியராஜன் அதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதற்கு அடுத்து வந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா மாஃபா பாண்டியராஜனுக்கு ஆவடி தொகுதியில் சீட் கொடுத்து வெற்றி பெறச்செய்தார். அதுமட்டுமில்லாமல், மாஃபா பாண்டியராஜனுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பையும் வழங்கினார்.

இப்படி ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்ததால் அதிமுகவில் முக்கிய அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜன், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர் செல்வம் நடத்திய தர்மயுத்தத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து அமைச்சர் பதவியை துறந்து போர்க்கொடி தூக்கினார்.

எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆன பிறகு, ஓ.பி.எஸ். – இபிஎஸ் அணிகள் இணைந்தபோது மாஃபா பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், அவர் தனக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என எதிர்பார்த்தார். அந்த துறையை செங்கோட்டையனும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.

இதனால், அதிருப்தியில் இருந்த மாஃபா பாண்டியராஜனிடம் அதிமுக தலைமை உங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என அவரை சாமாதானப்படுத்தியது. ஆனால், அதிமுக தலைமை மாஃபா பாண்டியராஜனை மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவோ அல்லது வேறு முக்கிய துறைகளின் அமைச்சராகவோ ஆக்குவதற்கான காலம் வந்தபோதும் அவரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.

தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த மணிகண்டன் நீக்கப்பட்டு அவருடைய துறையை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூடுதலாக பொறுப்பு வகிக்க ஒப்படைக்கப்பட்டது.

இது மாஃபா பாண்டியராஜனின் அதிருப்தியை மேலும் வலுவடையச் செய்தது. தகவல் தொழில்நுட்பத்துறை இலாகாவை தனக்கு அளித்திருக்கலாமே என்று மாஃபா பாண்டியராஜன் முதல்வரிடம் கேட்க அவர் அதை கண்டுகொள்ளவே இல்லை.

இந்த சூழலில்தான், மாஃபா பாண்டியராஜன், ஆவடி மாநகராட்சி கட்டடத்துக்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என்று முதல்வரை சிக்க வைக்கும் ஒரு கோரிக்கையை முன்வைத்து கடித எழுதியுள்ளார். அடுத்த ஆண்டு தேர்தல் வர உள்ள நிலையில், மாஃபா பாண்டியராஜன் அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடியை தூக்க தொடங்கியுள்ளார்.

மாஃபா பாண்டியராஜனின் போர்க்கொடி முழக்கத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன பதிலடி நடவடிக்கையை மேற்கொள்வார் என்று அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள்தான் முடிவு சொல்லும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close