கன்னியாகுமரியில் கடந்த 4 நாள்களாக பெய்த தொடர் மழை காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. பல இடங்களில் ஏரிகள், குளங்கள் நிரம்பியதில், தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
Advertisment
மலையோர பகுதிகளிலும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் வள்ளியாறு, பழையாறு, குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இத்தகைய சூழலில், குமரியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். மக்களுக்கு, நிவாரண உதவிகளை வழங்கினார்.
இதற்கிடையில், கன்னியாகுமரியில் கொல்லங்கோடு மஞ்சதோப்பு பகுதியில் தனிமையில் வசிக்கும் மூதாட்டியின் வீட்டை வெள்ளம் சூழ்ந்துகொண்டதாகவும், உணவின்றி தவிப்பதாக சமூக ஆர்வலர் "Shiju Neppoliyan" என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மூதாட்டிக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திரு்தார்.
அவரின் பேஸ்புக் பதிவு வைரலாக, அரை மணி நேரத்திற்குள் சமந்தப்பட்ட இளைஞரை தொடர்புகொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ், மூதாட்டியை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அவரது அறிவுறுத்தலின் பேரில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த அமைச்சரின் உதவியாளர்கள், மீட்பு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் பாட்டியை பத்திரமாக மீட்டு முகாமிற்கு அழைத்து சென்றனர்.
உணவின்றி தவிப்பதாக கூறிய மூதாட்டி, முகாமில் மிகுந்த மகிழ்ச்சியுடன் உணவு சாப்பிடும் காணொலியும் வெளியாகியுள்ளது. சமூக வலைதளத்தில் பதிவிட்ட கோரிக்கைக்கு அரை மணி நேரத்தில் தீர்வு கண்ட அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil