தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனின், உதவியாளர் செல்லமுத்து அமைச்சருடன் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்த நிலையில், செல்லமுத்துவுக்கு கடந்த 3 நாட்களாக கொரோனா அறிகுறிக இருந்துள்ளது. இதனல், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் செல்லமுத்துவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் உதவியாளர் செல்லமுத்துவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் அமைச்சருடன் தொடர்பில் இருந்ததால், அமைச்சர் மு.பெ. சாமிநாதனுக்கு டிசம்பர் 14ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில், அமைச்சருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அமைச்சருடன் நேரடி தொடர்பில் இருந்த அமைச்சரின் பிற உதவியாளர்களும் அலுவலகத்தில் இருந்தவர்களும் அவருடைய குடும்பத்தினர் என தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யபட்டுள்ளது. பரிசோதனையில் மற்ற யாருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"