உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பக்கத்து மாவட்டத்துக்கு சென்று உரம் வாங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கோபமாக ஒருமையில் பேசிய வீடியோ சமூக ஊடங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து 25.5 லட்சம் ரூபாய் மதிப்பில் குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு அதிதி தீவிர சிகிச்சை பிரிவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், தமிழக வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில், கடலூரில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பக்கத்து மாவட்டத்துக்கு சென்று உரம் வாங்கி வருவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியால், கோபமடைந்த அமைச்சர், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “உரம் நீ வாங்குறியா?” என்று செய்தியாளர்களை ஒருமையில் பேசி, 'எந்த விவசாயிகள் அப்படி கூறினார்கள் என்று சொல்லுயா' என மீடியாக்களிடம் எகிறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
அதன்பிறகு அங்கிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குறிஞ்சிப்பாடிக்கு புறப்பட்டு சென்றார். அங்கே செய்தியாளர்களை சந்தித்த அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, குறிஞ்சிப்பாடியில் விரிவாக பதில் அளித்தார். அப்போது, தமிழகத்தில் குருவை சாகுபடிக்கு தேவையான யூரியா, உரம், பொட்டாஷ், டிஏபி, 54,300 மெட்ரிக் டன் கையிருப்பு உள்ளதாகக் கூறினார்.
இதனிடையே, அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கடலூரில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களை ஒருமையில் பேசி மீடியாவிடம் எகிறிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் இத்தகைய பேச்சுக்கு சமூக ஊடகங்களில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.