கடலூரில் பைக்கில் சென்று வாழை சேதத்தை பார்வையிட்ட அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
கடலூர் மாவட்டத்தில், கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி ஆகிய தாலுகா பகுதிகளில் 2370 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 1109 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Advertisment
கடலூர் மாவட்டத்தில் சூறாவளி காற்றால் பாதிக்கப்பட்ட வாழை மரங்கள் குறித்து வருவாய்த்துறை மற்றும் வேளாண் துறையினர் இணைந்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. பத்து நிமிடம் மட்டுமே வீசிய திடீர் சூறாவளி காற்றால் கடலூர் அருகே ராமாபுரம், வெள்ளக்கரை, கீரப்பாளையம், வழிசோதனைப்பாளையம், அன்னவல்லி, குள்ளஞ்சாவடி வழுதலம்பட்டு, புலியூர் மேற்கு, கிழக்கு, கோரணப்பட்டு, மதனகோபாலபுரம் மற்றும் கட்டியங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாயிகள் பயிரிட்டு இருந்த வாழை மரங்கள் முறிந்தும், சாய்ந்தும் விழுந்து சேதமடைந்தது.
Advertisment
Advertisements
பெரும்பாலான வாழைகள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த போது, முறிந்து விழுந்தன. சில இடங்களில் குலை தள்ளிய பருவத்திலும், சில பகுதிகளில் குலை தள்ளாத வாழைகளும் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சாய்ந்து விழுந்து சேதமடைந்தன. இதை பார்த்த விவசாயிகள் கண்ணீர் விட்டனர். பாதிக்கப்பட்ட தங்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
பைக்கில் சென்று வாழை சேதத்தை ஆய்வு செய்த கடலூர் ஆட்சியர்
இதற்கிடையில் வாழை மரங்கள் விழுந்த பகுதிகளான கடலூர் கீரப்பாளையம், வெள்ளக்கரை, கொடுக்கன்பாளையம், ஒதியடிக்குப்பம், வழிசோதனைப்பாளையம் ஆகிய பகுதிகளை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலையில் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அமைச்சர் கீரப்பாளையம் சென்று சேதமடைந்த வாழைகளை பார்வையிட்ட போது, அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்ட மற்ற வாழை வயல்களையும் பார்வையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதை ஏற்ற அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கலெக்டர் அருண்தம்புராஜ் ஆகியோர் தனித்தனி இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து, பாதிக்கப்பட்ட வயலுக்கு சென்று சேதமடைந்த வாழைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமும் சென்றார்.
ஆய்வுக்கு பிறகு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் சூறைக் காற்றுடன் பெய்த மழையால் 2,370 ஏக்கர் (948 ஹெக்டேர்) வாழைகள் சேதமடைந்து உள்ளன. இதனால் 1,109 விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சேதமடைந்த பயிர்களை தோட்டக்கலை துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் இணைந்து கணக்கெடுத்து வருகின்றனர் என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், மழை மற்றும் சூறாவளி காற்றால் வாழைகள் சேதமடைந்து உள்ளன. இந்த பாதிப்பு விவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அடிக்கடி இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படுகின்றன. மேலும் வாழைகளுக்கு அப்படி நிவாரணம் வழங்கும் திட்டம் இல்லை. பேசி தான் முடிவு செய்யப்படும் என்றார்.
வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரசு அதிகாரிகள் ஆகியோர் அப்பகுதியில் பெயர் அளவில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு விட்டு புறப்பட சென்றனர். அப்பொழுது அப்பகுதியில் இருந்து விவசாயிகள் சேதமடைந்த அனைத்து பகுதிகளிலும் பார்வையிட வேண்டும், மேலும் உரிய நிவாரண வழங்க வேண்டும் என்று அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வாகனங்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெயரளவில் பாதிப்புகளை பார்வையிட வந்தது நியாயமா என்று கூறிய விவசாயி ஒருவர், வாக்களித்ததற்கு எங்களுக்கு விஷத்தை வாங்கித் தாருங்கள் குடித்துவிட்டு சாகுகிறோம் என்றார். பின்னர், மற்ற இடங்களில் ஏற்பட்ட பாதிப்புகளையும் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil