கோவை ஆர்.எஸ்.புரம் - மாநகராட்சி கலையரங்கத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாமை, தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார். தொடர்ந்து காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், கோவை மேயர் கல்பனா ஆனந்த் குமார் மற்றும் திட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கி உள்ளோம். அதற்கு தேவையான தரவுகளை பெற்றுத்தர பலவகைகளில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது குடும்பத்தினர் மருத்துவ வசதி பெற ஏதுவாக இருக்கும். 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். 52 பொது மருத்துவ சிகிச்சை பெறலாம். 6 வித அறுவை சிகிச்சை பெற முடியும், என்று கூறினார்.
குடும்ப ஆண்டு வருமானம் உயர்த்த முடியுமா என்ற கேள்விக்கு, சிறப்பு முகாமில் அதற்கு தீர்வு காணப்படும் என்றும், குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு, பணமாக வழங்குவீர்களா என்ற கேள்விக்கு அது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இ.டி அதிகாரி லஞ்ச வாங்கிய குற்றச்சாட்டில் சிக்கி உள்ளார் என்ற கேள்விக்கு, யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செயயும் என அமைச்சர் தெரிவித்தார்.
வேலை வாய்ப்பு கிடைக்க 2.000 பேர் பதிவு செய்து உள்ளனர். இதில் மேலும் வேலை வாய்ப்புகள் வர வாய்ப்பு உள்ளன. இளைஞர்கள் தனியார் வேலை வாய்ப்பு பெற ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“