சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 45 வது பிறந்த நாள் நேற்று (நவம்பர் 27ஆம் தேதி) விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதனால் தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசர், ஆவடி சட்டமன்ற தொகுதியில் சுமார் 2000 பொதுமக்களுக்கு வேட்டி சேலை, 100 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உடை உள்ளிட்ட நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும்,செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்த அமைச்சர் கூறியதாவது: "ஒரே ஒரு செங்கலை நட்டு வைத்துவிட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி விட்டதாக பிரதமர் மோடி கூறினார். இதுவரை அங்கு மருத்துவமனை கட்டுவதற்கான ஏற்பாடு நடப்பதாக தெரியவில்லை. அதே நேரத்தில் அவர்கள் ஆளுகின்ற குஜராத் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடித்து தற்போது செயல்பாட்டிற்கு திறந்து வைத்திருக்கிறார்.
பிரதமர் மோடி முழுக்க முழுக்க மொழியால் இனத்தால் திராவிடத்தை வெறுப்பது தெரிகிறது. ஆனால் அந்த ஒரு செங்கல்லை வைத்து ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்து பெருமை உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சேரும்.
தமிழ்நாட்டு மக்களுக்கும் கடல் கடந்து வாழ்கிற தமிழர்களுக்கும் உறுதுணையாக இருந்து, இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்து வந்தாலும் தட்டிக் கேட்கின்ற ஒரே தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான்.
திமுக இளைஞரணி செயலாளர் பதவி உதயநிதி ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த பரிசு. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டுமென்பதற்கு மாற்று கருத்து இல்லை.
ஒரு கால கட்டத்தில் அண்ணாக்கு கூடியது கூட்டம், அடுத்து கலைஞருக்கு, பேராசிரியருக்கு கூடியது, ஆனால் அவர்களுக்கு அடுத்து கூடும் என்றால் அது இளைய தளபதி உதயநிதி ஸ்டாலினுக்கு தான். காரணம் என்னவென்றால் அவரது அணுகுமுறையும், அவரது இளைஞரணி பட்டாளம் தான்.
கடந்த காலங்களில் நடைபெற்ற அனைத்து தேர்தல் வெற்றிகளும் உதயநிதியின் அணுகுமுறையால் கிடைத்து. உதயநிதி பொறுப்புக்கு வர வேண்டும் என்பது எங்களுடைய ஆசை. அமைச்சராகும் பட்சத்தில் அவருக்கு என்ன துறை ஒதுக்க வேண்டுமென்று முதல்வரே முடிவு செய்வார்”, என்று ஆவடியில் அமைச்சர் சாமு நாசர் பேட்டி அளித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil