திருவள்ளூர் அருகே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், கட்சி தொண்டர்கள் நாற்காலி எடுத்து வரத் தாமதமானதால் கல்லை எடுத்து எறிந்த வீடியோ வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களின் காலத்தில் தும்மினால்கூட வீடியோ எடுத்து வைரலாக்கி விடுகிற காலத்தில், தி.மு.க அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய பேச்சு மற்றும் நடவடிக்கை வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாவது வாடிக்கையாக உள்ளது.
அந்த வரிசையில், பால்வளத்துறை அமைச்சர் நாசர், கட்சி தொண்டர்கள் நாற்காலி எடுத்து வரத் தாமதமானதால் கல்லை எடுத்து எறிந்த வீடியோ வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே ஐ.சி.எம்.ஆர் என்கிற நல்லூர் பகுதியில் புதன்கிழமை (ஜனவரி 24) நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சி தி.மு.க சார்பில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேரில் சென்று ஆய்வு செய்தார். நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தில் பொதுமக்கள் அமரும் இடம் மற்றும் மேடையை பார்வையிட்டார். அப்போது, அமைச்சர் நாசர் அமர்வதற்கு நாற்காலி கொண்டுவரச் சொல்லப்பட்டது. நாற்காலி கொண்டுவரத் தாமதமானதால், கோபம் அடைந்த அமைச்சர் நாசர் கட்சிக்காரர்கள் மீது கல் எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கௌரவமான பதவியில் இருக்கும் அமைச்சர் நாசர், நாற்காலி கொண்டுவர தாமதமானது என்பதற்காக கட்சித் தொண்டர் மீது கல் எறிந்த சம்பவம் அங்கிருந்த பலர் நகைச்சுவையாக சிரித்தாலும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
இதே போல, சில வாரங்களுக்கு முன்னர், அமைச்சர் கே.என். நேரு, அரசு குடிநீர் திட்டம் தொடக்க விழா நிகழ்ச்சியில், தி.மு.க கவுன்சிலரை தலையில் தட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"