முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வீட்டிற்கு தீபாவளி நேரத்தில் 1.5 டன் அளவிற்கு ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாக கொடுக்கப்பட்டது என்று பால்வளத்துறை அமைச்சர் ஆவடி. சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.
சேலம் ஆவின் பால் பண்ணையில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, சேலம் மாநகர பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆவின் விற்பனை நிலையங்களை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் 1.5 டன் ஆவின் இனிப்புகளை தனது சொந்த பயன்பாட்டுக்கு கொண்டு சென்றிருப்பதாகவும், அது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும், கடந்த ஆட்சியின் போது ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் அமைச்சர் பட்டியலிட்டார்.
ஆவினில் 234 பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதுகுறித்து விசாரணை நடத்தி பணிநீக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும், 636 முதுநிலை மற்றும் இளநிலை ஆலை பணியாளர்களை நியமிக்க முறைகேடாக பணம் பெற்றுள்ளதாக வந்த தகவலை அடுத்து அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்தப் பணியிடங்களுக்கு புதிதாக பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் நாசர் கூறினார்.
தமிழகத்தில் பால் உற்பத்தி மற்றும் விற்பனை 1.50 லட்சம் அதிகரித்துள்ளதாகவும், சென்னையில் 22 விற்பனை நிலையங்கள் உள்பட விலைகுறைப்புக்கு பின்பும் பழைய விலைக்கே பால் விற்பனை செய்த நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 25 பால் ஒன்றியங்களிலும் முறைகேடு நடந்துள்ளது. இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என்று அமைச்சர் நாசர் கூறினார்.
இந்த நிலையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்த கருத்துக்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வரவேற்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜியின் அலுவலக அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகளுக்கு 2019-20 நிதியாண்டில் மட்டும் தீபாவளி பரிசு வழங்க லெதர் பேக் வாங்கிய வகையில் சுமார் 49 லட்சம் ரூபாய் செலவு செய்திருப்பதாக கணக்கு காட்டியிருப்பது அந்த ஆண்டு தணிக்கைத்துறையின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இது போன்ற பல்வேறு விஷயங்களில் தேவையற்ற செலவினங்களை செய்து ஆவினுக்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியிருப்பது ஆவின் தணிக்கைத்துறையின் 1000க்கும் மேற்பட்ட பக்கங்களில் அறிக்கையாக இருப்பதால் அதனை பெற்று லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையின் முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டால் ஆவினில் பல்வேறு ஊழல்கள் வெளி வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil