புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன; அவர் தப்ப முடியாது: ராஜேந்திர பாலாஜியை எச்சரிக்கும் அமைச்சர்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது, அடுத்தடுத்து புகார்கள் வருகின்றன. அவர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் உறுதியாக கூறியுள்ளார்

Minister Nasar says definite action against former minister Rajendra balaji: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்துக் கொண்டே இருப்பதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறியுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்காவில் நடைபெற்ற தொழுகையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள், கண்டிக்கப்படுவார்கள் என்று திமுக தேர்தல் அறிக்கையிலேயே சொல்லப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி மீதான உரிய நடவடிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. அவர் மீது மேலும் பலவிதமான குற்றச்சாட்டுகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தே கொண்டே இருக்கும். கடந்த ஆட்சியில் 2 லட்சத்து 30 ஆயிரம் உற்பத்தியாளர்களுக்கு தீபாவளி பட்டாசு வழங்கியதில்  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மோசடி செய்துள்ளார். ஆதாரபூர்வமாக சிக்கியுள்ளார். கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றவுடன் திமுக நடமாட முடியாது என்று கூறியிருந்தார். ஆனால் இன்றைக்கு ராஜேந்திர பாலாஜி தான் நடமாட முடியாமல் ஒளிந்து கொண்டிருக்கிறார். குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது போல தவறு செய்திருப்பதால் தான் மறைந்துள்ளார். சிக்கியிருந்தால் அவர் மீதான நடவடிக்கைகள் நிச்சயம் எடுக்கப்பட்டிருக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் பேசுகையில், 5 ஆண்டுகால ஆட்சியில் செய்ய வேண்டியதை வெறும் 5 மாதங்களில் செய்து முடித்துள்ளோம். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்துள்ளோம். அதிமுக ஆட்சியிலேயே திமுக உள்ளாட்சி தேர்தலில் பெரிய வெற்றியை பெற்றது.  தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையின் போது கூறியதை செய்து வருகிறார். வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும். பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆவினில் 130 கோடி ரூபாய் அளவிற்கு நெய் விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

முன்னதாக ஆவினில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகிய 4 பேர் மீது ஐந்து பிரிவுகளில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 8 தனிப்படைகள் தேடி வருகின்றன. வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடல் வழியாக தப்பிச் செல்லாமல் இருக்க கடலோர கண்காணிப்பை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்குகள் மூலம் பணப்பரிவர்த்தனைகள் நடைபெறுகிறதா என்று குற்றப்பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Minister nasar says definite action against former minister rajendra balaji

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com