சென்னையில் கருணாநிதி நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வருகை தந்த, அமைச்சர் எஸ்.எம். நாசரின் காலணிகளை, அவருடைய உதவியாளர் கையில் எடுத்துச் சென்றது வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
சென்னை மெரினாவில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு முன்னதாக, தனது காலணிகளை கழற்றினார். அப்போது, அவருடைய உதவியாளர், அமைச்சர் நாசரின் காலணிகளை கையில் எடுத்துச் சென்றதைக் குறிப்பிட்டு நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அமைச்சர் தனது உதவியாளரை காலணிகளை எடுத்து வர வற்புறுத்தினாரா என்பது உடனடியாக தெரியவில்லை. அமைச்சரும் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
அவர் காரில் திரும்பியபோது நீல நிற சட்டை அணிந்த உதவியாளர் ஒருவர் திமுக அமைச்சரின் காலணிகளை எடுத்து வந்து காருக்குள் வைப்பது கேமராவில் பதிவாகியது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதையடுத்து, நெட்டிசன்கள் கலவையாக கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
முன்னதாக, சில மாதங்களுக்கு முன்னர், திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியில் கட்சித் தொண்டர்களுக்கு நாற்காலி கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதால், நாசர் கல் எறிந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"