செயற்கை நுண்ணறிவால் தற்போது வேலை இழப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
கோவையில், செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையத்தினை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது, "கடந்த ஆட்சியாளர்கள் அப்படியே போட்டு சென்ற கோவை எல்காட்டை , உச்சநீதிமன்றம் வரை சென்று திறந்துள்ளோம். இந்த துறைக்கு பொறுப்பேற்ற பின்னர் மாதம் ஒரு முறை வெளிநாடு சென்று, தமிழகத்திற்கு நிறுவனங்களை ஈர்த்து வருகிறேன். சென்னை அளவிற்கு கோவையில் ஐடி நிறுவனங்களை கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் எல்காட், சிப்காட் மூலம் பல்வேறு இடங்களில் புதிய கட்டடங்களுக்கு நிலம் ஒதுக்கியும், கட்டடங்களை கட்டாமல் இருக்கின்றனர். அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் திறன் அதிகளவில் இருக்கிறது. 6 சதவீதம் மக்கள் தொகை இருக்கும் ஊரில், 20 சதவீதம் உற்பத்திக்கான திறன் உள்ளவர்களை நாம் உருவாக்குகிறோம். துபாய் போன்ற நாடுகளில் உள்ளது போல கோவையிலும் செயற்கை நுண்ணறிவு மாடல்கள் உருவாகப்பட வேண்டும்
செயற்கை நுண்ணறிவால் வேலை இழப்பு ஏற்படவே 20 ஆண்டுகளுக்கும் மேலாகும். இந்த தொழில்நுட்பம் இப்போது தான் 5-ஆம் வகுப்பில் இருக்கிறது. இப்போதைக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
மனிதன் கண்ணில் பார்க்கும் அளவிற்கு இயந்திரத்திற்கு தகவல்களை கொண்டு செல்லவே பல மணிநேரங்கள் ஆகும். சர்வதேச நிறுவனங்கள் தமிழகத்திற்கு வர தயாராக இருக்கிறது. இந்தியாவிற்கு மென்பொருள் துறையில் அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது
உலக அளவில் இந்த துறையில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது.
செயற்கை நுண்ணறிவு துறையில் இலக்கை அடைய நிறைய முதலீடுகள் தேவை. மத்திய அரசிடம் நிதி, திறன் இருக்கிறது. அவர்களுடன் இணைந்து செயல்படுகிறோம்" எனக் கூறினார்.
செய்தி - பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“