பொங்கல் பரிசு வழங்கும் தேதி மாற்றப்பட்டுள்ளது. மேலும் அதற்கான டோக்கன் வழங்கும் தேதியும் மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வழிவகை செய்யும் வகையில், ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த தொகுப்பில் ரூ. 1000 ரொக்கமும், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: மணப்பாறை நிகழ்ச்சியில் அமைச்சர் கே என் நேரு பெயர் மிஸ்ஸிங்: இருவர் பணியிட மாற்றம்
மேலும், இதன்மூலம் தமிழகத்தில் உள்ள 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் அரிசி குடும்பதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், பொங்கல் பரிசு தொகுப்பை முதலமைச்சர் ஜனவரி 2 ஆம் தேதிக்கு பதில் ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார் என தெரிவித்தார்.
மேலும், இதற்கான டோக்கன் டிசம்பர் 27 ஆம் தேதி வழங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் டோக்கன்கள் விநியோகிக்கப்படும் என்றும் கூறினார். புத்தாண்டு தினமான ஜனவரி 1ஆம் தேதி டோக்கன்கள் விநியோகிக்கப்படாது என்றும் அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் பெரியகருப்பன், நகர பகுதியில் நாள் ஒன்றுக்கு 300 அட்டைதாரர்களுக்கும், ஊரகப் பகுதிகளில் நாளொன்றுக்கு 200 அட்டைகளுக்கும் டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுப்பார்கள். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கரும்பு வழங்குவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்றும் தெரிவித்தார்.
மேலும், பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 2 ஆம் தேதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், வரும் ஜனவரி 2 ஆம் தேதிக்கு பதில் ஜனவரி 5 ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் என்றும் அமைச்சர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil