இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, தனது மளின் காதல் திருமணத்தை எதிர்த்தற்கு காரணத்தை கூறியுள்ளார். மேலும், அது ஒரு வலி. அதை மறந்து நீண்ட நாட்கள் ஆகிறது. அவர் அவருடைய பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். அதில் நாம் குறுக்கிடத் தேவையில்லை என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
தமிழக அமைச்சர்களில் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு. களத்தில் தீவிரமாக செயல்படும் அமைச்சர் சேகர் பாபு, அவருடைய மகளின் காதல் திருமணத்தை எதிர்த்து வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அண்மையில் சேகர் பாபுவின் மகள், தனது தந்தையின் ஆட்களுக்கு பயந்து தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும் தனது அப்பா கொலை மிரட்டல் விடுப்பதாவும் முதலமைச்சர்தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும் வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் சேகர் பாபு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது பூர்வீகம் மற்றும் தனது குடும்பம் மனைவி, மகன்கள், மகள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இந்த் பேட்டியில் அமைச்சர் சேகர் பாபு, “என்னுடைய மகளைப் பொறுத்தவரை, ஒரு தந்தையாக நான் அவருக்கு பாதுகாப்பான ஒரு வாழ்க்கையை அமைத்துத் தரப் பார்த்தேன். அந்த பாதுகாப்பான வாழ்க்கையை என்னால் அமைத்துத் தர முடியவில்லை. அவர் எங்கிருந்தாலும் வாழ்க” என்று கூறியுள்ளார்.
தனது வாழ்க்கையில் எல்லா முன்னேற்றங்களுக்கும் தனது மனைவிதான் காரணம் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சேகர் பாபு தனது மகளின் காதல் திருமணத்தை எதிர்ப்பது ஏன் என்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “திராவிட மாடல் என்று சொல்பவர்கள் இந்த திருமணத்தை ஏன் வேண்டும் என்று சொல்கிறேன் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். வெளிப்படையாக சொல்கிறேன். நானும் எனது மனைவியும் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். எனது மனைவியால் பிரச்னை இல்லை. 50 ரூபாய் இருந்தாலும் குடும்பம் செய்வார்கள். 500 ரூபாய் இருந்தாலும் குடும்பம் செய்வார்கள்.
ஓவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு கடமை இருக்கும். பெற்றத் தகப்பனுக்கு இருக்கின்ற ஒரு முக்கிய கடமை என்னவென்றால், தனது மகளுக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டும். அவர்கள் தேர்ந்தெடுக்கின்ற முடிவு என்பது அவர்கள் வாழ்க்கைக்கு பாதுகாப்பாக இருக்காது என்பதை அறிவுறுத்தி வந்தோம். ஆனால், அவர்கள் அந்த முடிவுதான் சரி என்று ஏற்றுக்கொள்கின்றபோது, நம்முடைய முடிவை நாம் மாற்றிக் கொள்கிறோம். அவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க அவ்வளவுதான்.
உங்கள் மகள் அப்பா கொலை மிரட்டல் விடுக்கிறார். முதலமைச்சர்தான் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வீடியோ வெளியிடுகிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர் பாபு, சமுதாயத்தில் பல்வேறு விசித்திரங்கள் நடக்கிறது. சமுதாயத்தில் எவையெல்லாம் நடக்கக்கூடாதோ அவையெல்லாம் நடக்கிறது என்று கேள்விப்பட்டிருப்போம். அவையெல்லாம் இதுபோன்ற வார்த்தைகள்தான் என்று கூறினார்.
இது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, “அது ஒரு வலி, அந்த வலியை மறந்து நீண்ட நாட்களாகிவிட்டன. அவர்கள் பாதையை அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள் அதில் நாம் குறுக்கிட வேண்டிய அவசியமில்லை.
வெளியே குழந்தைகளைப் பார்க்கும்போது, உங்கள் மகளின் ஞாபகம் வருமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, இதுவும் கடந்து செல்வோம். இதுதான் பதில் என்று தெரிவித்துள்ளார்.
இதைப் பற்றி நீங்கள் எங்கேயும் பேசியதில்லை. இதுதான் முதல் தடையாக உங்கள் மகளைப் பற்றி பேசுகிறீர்கள் என்று நெறியாளர் கூறியதற்கு, ஆமாம், இதுதான் முதல் தடவையாகப் பேசுகிறேன். நீங்கள் கேட்டபோது மறுக்கக் கூடாது என்பதற்காகப் பேசுகிறேன். நீங்கள் மனசார ஏதோ கேட்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். கேளுங்கள். நான் திறந்த புத்தகம்தான். ஒலிவுமறைவு என்பதே என்னிடம் இல்லை. என்னுடைய வாழ்க்கைப் பாதையில் இரண்டு பக்கங்களே கிடையாது. ஒரே வாழ்க்கை, ஒரே நேர்ப்பாதை. ஒரே பக்கம்தான். என்னுடைய வாழ்க்கையில் முழுக்க முழுக்க ஒலிவுமறைவே என்பதே கிடையாது.
தமிழக முதல்வர் அவர்கள்கூட முதன்முதலில் நான் சந்தித்தபோது, நான் திருக்கோயிலுக்கு செல்வேன் என்று கூறியபோது, அவருடைய தந்தை கலைஞரிடம் கூறியபோது, அவர் தாராளமாக செல்லட்டும் என்று கூறினார். அப்படி எதையுமே வெளிப்படையாக இருப்பவன் நான். என்னிடம் ஒலிவுமறைவு என்பதே கிடையாது.
என்னுடைய மகளைப் பொறுத்த வரைக்கும், அவருக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டும் என்று ஒரு தந்தையாக எனது கடமையில் இருந்து பார்த்தேன். அந்த பாதுகாப்பான வாழ்க்கை என்னால் அமைத்துத் தர முடியவில்லை. அவர்கள் தேடிக்கொண்ட வாழ்க்கைப்படி அவர்களை விட்டுவிட்டேன். அவர்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதைப் பற்றி நினைப்பதும் இல்லை. அதற்குண்டான எந்த முயற்சியையும் நாங்கள் எடுப்பதும் இல்லை. எங்கள் பணிகளை நாங்கள் பார்த்துக்கொண்டு அன்றாட வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். அவர்களை பற்றி சிந்திப்பதற்குகூட எங்களுக்கு நேரமில்லை என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“