‘ஏம்மா, நீ எஸ்.சி-தானே..!’ அரசு விழாவில் அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு

விழுப்புரம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை கட்டடத் திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, பெண்களுக்கு திராவிட மாடல் முக்கியத்துவம் கொடுக்கிறது என்று கூறியதோடு, ஒன்றியக் குழு தலைவரை ‘ஏம்மா…நீ எஸ்.சி தானே…’ என்று கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Ponmudi, Minister Ponmudi, DMK, Ponmudi asks caste at Chairman, Tamilnadu, Villupuram, Ponmudi Controversy

விழுப்புரம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை கட்டடத் திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, பெண்களுக்கு திராவிட மாடல் முக்கியத்துவம் கொடுக்கிறது என்று கூறியதோடு, நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒன்றியக் குழு தலைவரை ‘ஏம்மா…நீ எஸ்.சி தானே…’ என்று கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்துள்ள மணம்பூண்டியில் நியாய விலை கடையின் கட்டடத் திறப்பு விழா (செப்டம்பர் 19) திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், முகையூர் ஒன்றியக் குழுத் தலைவர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி இந்த விழாவில் கலந்து கொண்டு, கட்டடத்தை திறந்துவைத்துப் பேசினார். அப்போது, பொன்முடி பேசும்போது, பெண்களுக்கு திராவிட மாடல் முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதைக் கூறியபடியே, மேடையில் அமர்ந்திருந்த முகையூர் ஒன்றியக் குழுத் தலைவரான தலித் பெண்மணியைக் காட்டி ‘ஒன்றியக் குழுத் தலைவரே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்தான்’ என்று கூறியதோடு, அப்பெண்ணைப் பார்த்து, “ஏம்மா…நீ எஸ்.சி தானே” என்று கேட்க, அவரும் எழுந்து நின்று ஆமாம் என்று கூறுகிறார்.

அமைச்சர் பொன்முடி, தி.மு.க-வின் திராவிட மாடல் ஆட்சியைப் புகழ்ந்து பேசுவதற்காக, ஒரு பொது நிகழ்ச்சியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒன்றியக்குழு தலைவரிடம் “ஏம்மா…நீ எஸ்.சி தானே” என்று கேட்டது சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் பொன்முடி பேசியது குறித்து, சமூக ஊடகங்களில் தலித் அரசியலை தொடர்ந்து விவாதித்து வரும் ஸ்டாலின் தி கடுமையாக விமர்சித்துள்ளார். ஸ்டாலின் தி தனது முகநூல் பக்கத்தில், ‘சாதி கேட்பதுதான் திராவிட மாடலா’ என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: “விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்துள்ள மணம்பூண்டியில் நியாய விலை கடையின் கட்டடத் திறப்பு விழா செப்டம்பர் 19ம் தேதி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர், ஒன்றியக் குழுத் தலைவர் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற இந்த விழாவில் கலந்து கொண்டு, கட்டடத்தை திறந்துவைத்து உரையாற்றினார் திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி. அவர் உரையாற்றும் போது, பெண்களுக்கு திராவிட மாடல் முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதைக் கூறியபடியே, முகையூர் ஒன்றியக் குழுத் தலைவரான தலித் பெண்மணியை காட்டி ‘ஒன்றியக் குழுத் தலைவரே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்தான்’ என்று கூறியதோடு, அப்பெண்ணைப் பார்த்து, “ஏம்மா…நீ எஸ்.சி.தானே” என்று கேட்க, அவரும் எழுந்து நின்று ஆமாம் என்று கூற நேரிட்டிருக்கிறது.

அரசு நிகழ்ச்சி மேடையில், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள், பொதுமக்கள் முன்னிலையில் ஒரு மாநிலத்தின் உயர்கல்வித் துறை அமைச்சர் இப்படி சாதியை கேட்பது எந்தவகையில் நியாயமாக முடியும். இதற்கு, ‘இதுதான் திராவிட மாடல்’ என்கிற அடையாளம் வேறு. இதையெல்லாம் இவர்களால் கைவிட முடியாது. சாதியில் ஊறிப்போனக் கூட்டத்திலிருந்து ஒருக் கூட்டம்தான் திராவிட மாடல் எனும் வேடம் போட்டுக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

வெறும் கண்டனங்களோடு முடிந்துவிடக் கூடியதல்ல இப்பிரச்சனை. தமிழக திமுக அரசு, பொன்முடி அவர்களை அமைச்சர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் பதிவியிலிருந்து நீக்க வேண்டும். பொது இடத்தில் தலித் சமூகத்துப் பெண்ணை சாதிக்கேட்ட வன்கொடுமைக்காக, பொன்முடி மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

அதே நேரத்தில், பாவலர் தலையாரி என்பவர் தனது முகநூல் பக்கத்தில், அமைச்சர் பொன்முடி ஒன்றியக்குழு தலைவரிடம் எஸ்.சி-யா என்று கேட்டதற்கு கோபப்படுவது அர்த்தமற்றது என்று பதிவிட்டுள்ளார்.

ஸ்டாலின் தி தனது மற்றொரு பதிவில், “தலித் சமூக அலுவலரை சாதிரீதியாக இழிவு படுத்தினார் அமைச்சர் கண்ணப்பன்.

தலித் சமூகத்தைச் சார்ந்த சென்னை மாநகராட்சி தலைவரை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் ஒருமையில் பேசினார் அமைச்சர் கே.என்.நேரு.

தலித் சமூகத்தைச் சார்ந்த ஒன்றியக் குழுத் தலைவரான பெண்மணியை சாதிக் கேட்டு இழிவு படுத்துகிறார் அமைச்சர் பொன்முடி.

திமுக தீண்டாமையை கடைப்பிடிக்கிறது என்பதற்கு இவையெல்லாம் சாட்சிகள்.

அத்தனையையும் வேடிக்கைப் பார்க்கிறது முதல்வர் ஸ்டாலினின் மனசாட்சி.

திராவிட மாடலா? தீண்டாமை மாடலா? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “தலித் அல்லாத இந்து ஒருவர், பொது இடத்தில் தலித் ஒருவரை ‘சாதிக் குறித்து விசாரணை’ செய்வது வன்கொடுமைக் குற்றம்.

எனவே, உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

உயர்கல்வித் துறை அமைச்சர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்து அவரை நீக்க வேண்டும்” என்று ஸ்டாலின் தி வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் பொன்முடி சேர்மன் இடம் சாதி கேட்டது குறித்து பாவலர் தலையாரி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: “இது மாதிரியான அநாகரீகமான விமர்சனங்களை பதிவிடாதீர்கள் . நான் உணவுப் பாது காப்பு அதிகாரியாக இருந்த போது என்னிடம் சான்றிதழ் வாங்க வந்த தலித் அல்லாத எத்தனையோ பேர் என்னிடம் “சார் நீங்க எஸ்சியா சார் “என்று கேட்டிருக்கிறார்கள் . நான் “ஆமாம் “என்று இயல்பாக பதில் சொல்லியிருக்கிறேன் . அவர்கள் என்னை இழிவு செய்ய அதை கேட்க வில்லை . என்னைப் பற்றி நான்கு பேரிடம் பெருமையாக சொல்லவே அதைக் கேட்கிறார்கள் . அங்க ஒரு எஸ்சி ஆபிசர் இருக்கிறாரு அவர போய்ப் பாருங்க என்று சொல்லத்தான் என் சாதி என்ன என்று கேட்கிறார்கள் . அதற்காக கோவப்படலாமா . அந்தக் கேள்வி எங்கு கேட்கப் படுகிறது ,எப்படி கேட்கப் படுகிறது ,எந்த நோக்கத்திற்காக கேட்கப் படுகிறது என்பதைப் பொறுத்துத் தான் நாம் ஆத்திரப்பட வேண்டும் . அந்த அடிப்படையில் அமைச்சர் பொன்முடி கேட்டதற்காக கோவப்படுவது அர்த்தமற்றது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Minister ponmudi asks chairman are you belongs to scheduled castes triggers controversy

Exit mobile version