மே 1-ம் தேதி உழைப்பாளர் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அனைத்து ஊராட்சிகளிலும் கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கெடார் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு மக்களிடம் உரையாற்றி குறைகளை கேட்டறிந்தார்.
கெடார் ஊராட்சி மன்ற தலைவர் இந்திராமணி வரவு செலவு கணக்குகளை பொதுமக்கள் முன்னிலையில் வாசித்தார். தொடர்ந்து அமைச்சர் பொன்முடி பேசுகையில், கெடார் ஊராட்சிக்கு உயர்நிலை பள்ளிக்கூடம், காவல்நிலையம், தொடக்க கூட்டுறவு வேளாண் சங்கம் உள்ளிட்டவைகள் கொண்டு வந்தது தி.மு.க அரசு தான். அரசு பள்ளியில் படித்து கல்லூரி செல்லும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தான் என்றார்.
தொடர்ந்து, பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அமைச்சரிடம் குறைகளை தெரிவித்தனர். அப்போது செல்லங்குப்பம் பகுதியில் கடந்த 13 வருடங்களாக முறையான சாலை, குடிநீர் வசதி இல்லை எனப் பொதுமக்கள் தெரிவித்தனர். அப்போது ஆவேசமடைந்த அமைச்சர் ஒருமையில் பேசியும், பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் அக்கிருந்தவர்கள் புகார் தெரிவித்தனர்.
பெண்கள் மத்தியில் அமைச்சர் பேசிய வார்த்தைகளால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கடந்த காலங்களிலும் அமைச்சர் பொன்முடி இதுபோன்று சர்ச்சைக்குரிய கருத்துகள் பேசியது விமர்சனத்திற்குள்ளானது. பெண்களுக்கு இலவச பேருந்து சேவை தொடர்பாக பேசிய போது "ஓசி பஸ்" எனக் கூறிய கருத்துகள் பேசு பொருளானது. இதையடுத்து அவர் வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கெடார் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி, துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“