தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்த அமைச்சர் பொன்முடி, அப்பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடியின் சமீப கால பேச்சுகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு குரல்கள் கிளம்பி வருகின்றன. முன்னதாக, மகளிருக்கான இலவச பேருந்து வசதி குறித்த அவரது கருத்துகளுக்கு கண்டனம் வலுத்தது. இதேபோல், பட்டியலின பெண் ஊராட்சி ஒன்றிய தலைவரின் சாதி குறித்து கேட்டதாகவும் அவர் மீது சர்ச்சை எழுந்தது. இது மட்டுமின்றி, "எனக்கு ஓட்டுப் போட்டு கிழிச்சீங்களா?" என பெண்களை அவர் கடிந்து கொண்டது நினைவுகூரத்தக்கது.
இந்த சூழலில் பொன்முடியின் சமீபத்திய பேச்சு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பெண்கள் குறித்து மிகவும் இழிவான கருத்துகளை பொன்முடி முன்வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அமைச்சர் ஒருவரே இவ்வாறு பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இணையத்தில் பலரும் பதிவிட்டனர்.
இதன் விளைவாக, தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும், அமைச்சர் பொன்முடிக்கு கண்டனம் தெரிவித்தார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், "அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தி.மு.க-வில் இருந்து அமைச்சர் பொன்முடி மீது கட்சி ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, தி.மு.க துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் பொன்முடி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கட்சி தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் பிறப்பித்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/04/11/Uz1mwa9asGsFL4m8k6hy.jpg)
பொன்முடியின் பேச்சுகளுக்கு பல்வேறு விமர்சனங்கள் கூறப்படும் நிலையில், தி.மு.க-வின் இந்த நடவடிக்கை அரசியல் களத்தில் பேசுபொருளாகி உள்ளது.