அமைச்சர் உதயநிதி சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியது சர்ச்சையான நிலையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் பொன்முடி சனாதனத்தை எதிர்க்க உருவாக்கப்பட்டது இந்தியா கூட்டணி என்று பேசியது சர்ச்சையாகி உள்ளது.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய தி.மு.க இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியது தேசிய அளவில் பெரும் சர்ச்சையானது.
பா.ஜ.க மூத்த தலைவர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அயோத்தி சாமியார் ஒருவர் உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்தார். சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டும் என்று தமிழக பா.ஜ.க போராட்டம் நடத்தியது.

இந்த நிலையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்திய அதே சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய தி.மு.க-வின் மூத்த தலைவரும் அமைச்சருமான பொன்முடி, சனாதனத்தை ஒழிப்பதற்காக 26 எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது என்று கூறியது பா.ஜ.க.வினரால் பெரும் சர்ச்சையாக்கப்பட்டுள்ளது.

“சனாதன தர்ம எதிர்ப்புக்காகவே இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் பொன்முடி பேசிய வீடியோவை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது: “பத்திரிக்கைகள், ஊடகங்கள் வாயிலாக நம்முடைய சனாதன எதிர்ப்பு கொள்கையை இங்கு இருப்பவர்கள் சொல்லிவிட்டார்கள். இந்தியா என்பது சனாதன எதிர்ப்புக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கூட்டணிதான். இந்தியா கூட்டணியில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த வேறுபட்ட கருத்தும் இல்லை.” என்று கூறியுள்ளார்.
மேலும், சனாதன ஒழிப்பு மாநாட்டில் பொன்முடி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“