தமிழகத்தின் தற்போதைய அமைச்சரவையின் 35 அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து பணியாற்றிடுவேன் என ட்வீட் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு (2021) நடந்த சட்டசபை தேர்தலில் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக களம் இறங்கினார். சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார் உதயநிதி. தி.மு.க பெரும்பான்மை இடங்களை பிடித்த ஆட்சி அமைத்த நிலையில், அப்போதே உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால், அப்போது அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
இதையும் படியுங்கள்: சினிமாவுக்கு ‘பை பை’… உதயநிதி இனி முழு நேர அரசியல்வாதி!
அப்போதிருந்தே உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். உதயநிதியை அமைச்சர் ஆக்க வேண்டும் என அமைச்சர்கள் பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், பதவியேற்புக்கு முன்பாக தனது பெற்றோர் முதல்வர் ஸ்டாலின் – துர்கா ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், ”எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil