இந்தியாவில் ஆண்டுதோறும் பொறியியல் பட்டம் பெறுபவர்களின் எண்ணிக்கையில், எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு 17% பொறியாளர்களை பங்களிப்பதாக தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், மேட்டுப்பாளையம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ ஏ.கே. செல்வராஜின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், “எங்கெல்லாம் மனித வளம் இருக்கிறதோ, அங்கெல்லாம் அதிக நிறுவனங்கள் ஈர்க்கப்படும். 100 ஆண்டுகளுக்கும் மேலான திராவிட ஆட்சியில் அனைவருக்கும் கல்வி அளித்ததன் மூலம் உருவாக்கப்பட்ட மனித வளம் தமிழ்நாட்டின் முக்கியமான வளம்” என்று கூறினார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு 17% பொறியாளர்களை பங்களிப்பு செய்வதால் நாம் பொறியியலில் முன்னணியில் இருக்கிறோம்.
“ஐடி என்பது மாநிலத்தின் மிகப்பெரிய வேலை வழங்கும் துறையாகும். கடந்த ஆண்டு, 11 மில்லியன் சதுர அடியில் ஐடி நிறுவனங்களுக்காக சென்னையில் அரசு மற்றும் தனியார் துறையால் அலுவலக இடம் உருவாக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது,” என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
“இன்னும் 10 நாட்களில் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடுக்கு இணையான ஒரு மெகா ஐடி மாநாடு பிப்ரவரி 23 மற்றும் 24-ம் தேதிகளில் நடைபெறும்” என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய அ.தி.மு.க எம்.எல்.ஏ செல்வராஜ், கோவை மாவட்டம், காரமடை பேரூராட்சியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அ.தி.மு.க ஆட்சியில் கோவையில் சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டப்பட்ட ஐடி பூங்கா தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்று கூறினார்.
இது குறித்து அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், சட்டப்பேரவையில் பேசியதாவது: “கோவையில் எல்காட் நிறுவனம் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டடம் கட்டியது. இதனால், அவற்றை திறக்க முடியாத நிலை இருக்கிறது. சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டு 2.5 லட்சம் சதுர அடியில் கோவையில் கட்டப்பட்ட கட்டடம் திறக்கப்பட்டால் பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வெள்ளம் , பேரிடர் பாதிப்பு ஏற்படும் பகுதியில் இல்லாமல் மற்ற பகுதியில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4-5 மில்லியன் சதுர அடியில் ஐடி நிறுவனங்கள் புதிதாக கட்டடம் கட்டப்படுவது வழக்கம். ஆனால், கடந்த ஒரே ஆண்டில் சென்னையில் 11 மில்லியன் சதுர அடியில் ஐடி நிறுவனங்கள் கட்டப்பட்டிருக்கிறது. பெங்களூரு , ஹைதராபாத் நகரங்களில் இருந்து வெளியேறும் ஐ.டி நிறுவனங்கள் கோவை, மதுரையை நோக்கி வர உள்ளன. பிப்ரவரி 23, 24-ம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஐ.டி மாநாடு நடைபெற இருக்கிறது” என்று பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“