/indian-express-tamil/media/media_files/wmGsN6z24CVBYGsoVs4D.jpg)
கேபிள் டிவி சேவையை போல வீடுகளுக்கு 100 எம்.பி.பி.எஸ் வேகத்தில் மாதந்தோறும் ரூ. 200 கட்டணத்தில் இணைய சேவை வழங்கப்படும் என்று அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று (ஏப்ரல் 25) தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்து பேசினார்.
அப்போது பேசிய அமைச்சர் பி.டி.ஆர், தமிழ்நாடு கண்ணாடி இலை வலையமைப்பு நிறுவனம் மூலமாக (TANFINET) தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 92 சதவீதம் பணிகள் 53 ஆயிரத்து 334 கிலோ மீட்டர் தொலைவிற்கு மாநிலத்தில் உள்ள 11626 கிராம பஞ்சாயத்துகளை இணைக்கும் பணிகள் நிறைவடைந்து உள்ளது. மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் மீதமுள்ள பணிகள் நிறைவடையும். இதன்மூலமாக வீடுகளுக்கு கேபிள் டிவி சேவைபோல, மாதம் 200 ரூபாய் கட்டணத்தில் 100 Mbps வேகத்தில் இணையதள சேவை வசதி வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
ஆதார் சேவைகளை மக்கள் எளிதில் பெரும் வகையில் கூடுதலாக 50 புதிய ஆதார் பதிவு மையங்கள் தொடங்கப்படும். இ-சேவை மையங்களில் பெறக்கூடிய சேவைகளை, வாட்ஸ் அப் செயலி மூலமாக ஒருங்கிணைத்து வழங்க திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் முதற்படியாக இதுவரை ஏற்கனவே 2,000 அரசு அலுவலகங்களுக்கு இணைய வசதிகொடுக்கப்பட்டுள்ளது. 4,700 கிராம பஞ்சாயத்துகளில் இருந்து இணைய வசதி வேண்டும் என்ற விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல் இ-சேவை மையம் மூலம் 1.2 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர். தி.மு.க ஆட்சிக்கு வந்தபின் 25,000 இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.