“ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.5 கோடியில் ரூ.4 கோடியை அட்சயப்பாத்திரம் திட்டத்திற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.1 கோடி கண்ணுக்குத் தெரியாத கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.” என்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் புகார் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், “2018-19-ம் ஆண்டில் ஆளுநர் மாளிகைக்கு வழங்கப்பட்ட 50 லட்சத்திலிருந்து 5 கோடியாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதனால், நிதி ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்தோம்.
5 கோடியில் 4 கோடியை அட்சயப்பாத்திரம் திட்டத்திற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு கோடி ரூபாய் கண்ணுக்குத் தெரியாத கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆளுநர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற வகையில் அந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கணக்கைப் பார்த்தால் அச்சம் வருகிறது. சி.ஏ.ஜி விதிகளை மீறி நடந்துள்ளது.
இந்த மாதிரி திட்டம் ஜனநாயகத்திற்கு விரோதமானது. 5 கோடியை மறைமுகமாக எடுத்துச்செல்வது நல்ல திட்டமே இல்லை. இது தொடர்பாக ஆளுநர் விளக்கம் அளிக்க வேண்டும். இந்த மாதிரியான திட்டங்களில் மாற்றம் கொண்டு வருவதே சரி. அரசு கஜானாவிலிருந்து நேரடியாகச் செலவு செய்ய வேண்டும்” என்று கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறுக்கீட்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ் “ஏழைகளுக்குக் கொடுக்கப்பட்டதைக் கொச்சைப்படுத்துகிறீர்களா?. நீங்கள் சொன்னா சரி. நாங்கள் சொன்னா தப்பா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய சபாநாயகர் அப்பாவு, “இந்த விவகாரம் தொடர்பான ஆதாரத்திற்கு நிதியமைச்சர் பொறுப்பெடுத்துக் கொள்கிறார்” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"