சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, உதவிப் பொறியாளர், உதவி நிர்வாக பொறியாளர் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை புளியந்தோப்பு கேபி.பார்க்கில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் விரைவிலேயே சிமெண்ட் பூச்சு உதிர்ந்து விழுவது குறித்து அங்கே சமீபத்தில் குடியமர்த்தப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள்.
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகார் எழுப்பினார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் உடனடியாக பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது பேசிய குடிசை மாற்று வாரிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், கட்டிடம் கட்டியதில் யார் தவறு செய்து இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். இதையடுத்து புளியந்தோப்பு கே.பி. பார்க் குடிசை மாற்று வாரிய கட்டடத்தின் உறுதித் தன்மை ஆய்வு செய்யப்படும் என்று உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, புளியந்தோப்பு கேபி.பார்க்கில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட கட்டடம் தரமற்றம் முறையில் கட்டப்படதாக எழுந்த புகார் தொடர்பாக, உதவிப் பொறியாளர், உதவி நிர்வாக பொறியாளர் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “முன்னாள் அமைச்சர்களுக்கு தெரியாமல் தவறு நடந்தாலும், ஜனநாயக முறைப்படி அவர்களே பொறுப்பு. எங்கெல்லாம் தவறு நடந்து உள்ளதோ, அங்கெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு குடியிருப்புகள் தரமற்ற முறையில் கட்டப்பட்ட விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய, நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், “சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்போது, முன்னாள் அமைச்சர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியும்?” என கேள்வி எழுப்பினார். மேலும், தனது துறையில், தன்னுடைய அதிகாரம் இல்லாமல் எதுவும் நடக்க கூடாது என்ற விதிமுறை தீவிரமாக பின்பற்றி வருவதாகக் கூறினார்.
முன்னதாக, மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது தொடர்பாக, நேற்று (ஆகஸ் 29) கருத்து தெரிவித்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், “ஹைட்ராலிக் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் முறையாக ஆய்வு செய்யப்படாமல், முறையாக பராமரிக்கப்படாமல் பயன்படுத்தி உள்ளனர். இது விபத்துக்கு முக்கிய காரணம். அதேபோல் இந்த பாலத்தின் கட்டுமானத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் முறையாக பயிற்சி பெறவில்லை. ஊழியர்களுக்கு எப்படி இயந்திரங்களை இயக்க வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்படவில்லை.
இதுவும் விபத்திற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது. பாலத்தின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து மேற்கொண்டு முடிவு எடுப்பார். இது தொடர்பாக விசாரணை நடக்க உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மூலம் பாலம் கட்டும் ஒப்பந்ததாரரிடம் எங்கே தவறு நடந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.