மெரினாவில் நீதிமன்ற தீர்ப்பால் இடம் கிடைப்பது எல்லாம் வரலாறு ஆகாது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
Advertisment
திருவண்ணாமலை மாவட்டம் சேவூர் புறவழிச்சாலை அருகே, ஜெயலலிதா பேரவை சார்பில் அதிமுக சாதனை விளக்க சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதனை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, சேவூர் எஸ்.ராமச்சந்திரன், நிலோபர் கபில், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது மேடையில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "திமுக செயல் தலைவர் ஸ்டாலின், 'கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய கேட்டவுடன் இடம் கொடுக்கவில்லை' என்று கூறுகிறார். கேட்டவுடன் இடம் கொடுப்பதற்கு உங்கள் அப்பா என்ன தியாகியா? கேட்டவுடன் இடம் கொடுப்பதற்கு உங்கள் அப்பா என்ன முதலமைச்சரா? கேட்டவுடன் கொடுப்பதற்கு, நீ விட்டுக் கொடுக்குற எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட அவரிடம் இல்லையே. அடையாளம் இல்லாதவர்களுக்கு எல்லாம் அடையாளம் கொடுப்பதற்கான இடம் மெரினாவில் இல்லை. 'இந்த நாட்டு மக்களால் அங்கீகரிக்கப்படுபவர்களுக்கு மட்டுமே மெரினாவில் இடம் கொடுக்க முடியும்' என நாங்கள் சொல்லவில்லை. நீங்களும் உங்கள் அப்பனும் தான் சொன்னீர்கள். நீதிமன்ற தீர்ப்பால் தான் உங்கள் அப்பனுக்கு அங்கே இடம் கிடைத்தது என வரலாறு சொல்லும்.
ஆனால், என் புரட்சித் தலைவருக்கும், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களுக்கும், எங்கள் அம்மாவுக்கும் மக்கள் தீர்ப்பால் தான் மெரினாவில் இடம் கிடைத்தது என்று இந்த நாடும் இந்த நாட்டு வரலாறும் என்றும் சொல்லும். மக்கள் தீர்ப்பால் தான் மெரினாவில் இடம் கிடைக்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பால் இடம் கிடைக்க கூடாது. ஜெயித்தது நீங்கள் இல்லை... நாங்கள் தான்" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.