“திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன் என்றும் பெரியார், அண்ணா, அம்பேத்கர், கருணாநிதி, ஸ்டாலினுக்கு முன்னா, சமூகநீதியைப் போதித்த ஒரே தலைவன் ராமன்” என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.
மேலும், பெரியார், அண்ணா இருவரும் ராமாயணத்தையும் கம்ப ராமாயணத்தையும் விமர்சித்து பேசியும் எழுதியும் உள்ள நிலையிள், அமைச்சர் ரகுபதி “திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன் என்றும் ராமர் ஆட்சியின் நீட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெறும் தி.மு.க ஆட்சி என்றும் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் கம்பன் கழக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது: “கம்ப ராமாயணத்தை உற்றுநோக்கி உள்நோக்கி சமுதாயக் கண்ணோட்டத்தோடு பார்த்தால், அங்கே நமக்கு தெரிவது, சமத்துவம், சமூகநீதி, எல்லோருக்கும் எல்லாம், நாம் அனைவரும் அண்ணன் தம்பிகள், நமக்குள் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது, இதுதான் கம்ப ராமாயணம். இதைத்தான் நம்முடைய தலைவர் தளபதி (மு.க. ஸ்டாலின்) திராவிட மாடல் ஆட்சி என்கிறார். கம்ப ராமாயணம் சொல்வது திராவிட மாடல் ஆட்சியைத்தான் சொல்கிறது என்பதால், இதை நான் சொல்கிறேன். மற்றவர்கள் யாரும் தப்பா நினைத்துக்கொள்ள வேண்டாம். ராமன் எந்த குலத்தில் பிறந்தான் என்று பார்ப்பது கிடையாது. ராமன் அனைவருக்கும் பொதுவானவனாக இருந்தான் என்றுதான் நாம் பார்க்கிறோம்.
தசரதனுடைய மகனாகத்தான் விபீடனனையும் குகனையும் சுக்ரீவனையும் ராமன் ஏற்றுக்கொண்டிருக்கிறான் என்று சொன்னால், அங்கே ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை எதிர்காலத்திலே உருவாக வேண்டும், இருக்க வேண்டும் என்ற உன்னத லட்சியத்தோடு உருவாக்கப்பட்ட காவியம்தான் ராம காவியம், கம்ப ராமாயணம் என்பதை நாம் இங்கே மனதிலே வைத்துக்கொண்டாக வேண்டும். எனவே, பாதி பேருக்கு இது கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும். இருந்தாலும், அதில் இருக்கக்கூடிய பல நல்ல கருத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும். போற்றப்பட வேண்டும்.
அந்த வித்தியாசமான கண்ணோட்டத்திலே நாங்கள் பார்க்கிறபோது, இது எங்களுடைய திராவிட மாடலுக்கு பொருத்தமான ஒன்றாக இருக்கும் என்ற காரணத்தினாலேதான் ராமனை திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடியாக இருக்கும் நாங்கள் சொல்லி வருகிறோம். தந்தை பெரியாருக்கு முன்னால், பேரறிஞர் அண்ணாவுக்கு முன்னால், அண்ணல் அம்பேத்கருக்கு முன்னால், தலைவர் கலைஞருக்கு (மு. கருணாநிதி) முன்னால், இன்று தலைவர் தளபதிக்கு (மு.க. ஸ்டாலின்) முன்னால், இந்த திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்துச் சென்றிருக்கின்ற சமூகநீதியின் காவலர், சமத்துவம் சமூகநீதி இவற்றையெல்லாம் போதித்து உலகத்திற்கு எடுத்துச் சொன்னவர், எல்லோரும் சமம் என்று சொன்ன ஒரே நாயகன் ராமன். இதை யாரும் மறுக்க முடியாது. இதை மறுப்பதற்கான வாய்ப்பும் கிடையாது.
ராமர் ஆட்சியின் நீட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெறும் தி.மு.க ஆட்சி. 2026 சட்டசபைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க அறுதிப் பெரும்பான்மை பெற்று யாருடைய தயவு, இல்லாமல் மீண்டும் ஆட்சியை அமைக்கும். யாருடைய தயவையும் பெறும் சூழ்நிலை எங்களுக்கு வராது.” என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.