ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்நிலையில் ஆளுநர் எப்படி நிராகரித்தார் என்பது தெரியவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய விளையாட்டுகளில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்தவர்கள், தற்கொலை செய்துகொண்டனர். தொடர்ந்து இதுபோல பல செய்திகள் வெளியானது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதனையடுத்து தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதா உருவாக்கப்பட்டு. அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டது . இந்த மசோதா அக்டோபர் 1ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டு, ஆளுநரும் ஒப்புதல் அளித்த சட்டம் அமலானது.
இதனையடுத்து அக்டோபர் மாதத்தில் சட்டபேரவை குளிர்கால கூட்டத்தொடரில், ஆன்லைன் சூதாட்ட அவசர சட்டதிற்கு மாற்றாக சட்டமசோதாவை அமைச்சர் எஸ்.ரகுபதி தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
அந்த மசோதாவில் பல்வேறு விளக்கங்கள் ஆளுநர் கோரியிருந்தார். அதற்கு 24 மணி நேரத்தில் விளக்கங்களை தமிழக அரசு அளித்தது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு டிசம்பர் 2ம் தேதி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து ஆளுநர் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டு நடத்தும் பிரதிநிதிகளை சந்தித்து பேசியது விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த முறையும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மாசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். மத்திய அரசின் கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம் இயற்றலாம் என்பது உள்ளிட்ட 8 கேள்விகளை முன்வைத்து திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி “ ஆளுநர் எப்படி நிராகரித்தார் என்பது தெரியவில்லை. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திப்பி அனுப்பிய, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை மீண்டும் சட்டமறத்தில் நிறைவேற்றினால், அதற்கு அவர் கண்டிப்பாக ஒப்புதல் கொடுத்தே ஆக வேண்டும், அதுதான் சட்டம் “ என்று அவர் கூறியுள்ளார்.