முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியின் ஊழல் வழக்கு விசாரணை தொடர்பான கோப்புகளை ஆளுநர் ஆர்.என். ரவி பெற்றதற்கான ஒப்புகைச் சீட்டை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியின் ஊழல் வழக்கு விசாரணை தொடர்பான கோப்புகளை இன்னும் பெறவில்லை என்று ஆளுநர் அலுவலகம் தரப்பில் இருந்து இருந்து தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த கோப்புகளை ஆளுநர் அலுவலகம் பெற்றதற்கான ஒப்புகைச் சீட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், கோப்புகளைப் பெற்றுவிட்டு இன்னும் பெறவில்லை என்று ஆளுநர் அலுவலகம் கூறுவது அழகல்ல என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி, உள்ளிட்ட 4 பேர் மீதுள்ள ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணயைத் தொடங்குவதற்கு தேவையான அனுமதி ஆணையைக் கோரி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்ட மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்குமாறு ஆளுநர் ஆர்.என். ரவி-க்கு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்த கடிதத்திற்கு பதில் அளித்த ஆளுநர் ஆர்.என். ரவி, அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீதான ஊழல் வழக்கு தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட விசாரணை அறிக்கை கிடைக்கப்பெறவில்லை. மேலும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஊழல் வழக்கு தொடர்பாக நீதிமன்ற விசாரணையைத் தொடங்க இசைவு ஆணை கேட்டு எந்த கடிதமும் ஆளுநர் மாளிகையில் பெறப்படவில்லை என்று பதில் அளித்திருந்தார்.
இதையடுத்து, சட்டத் துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்ட பதில் கடிதத்தில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணையைத் தொடங்குவதற்கு இசைவு ஆணை அனுப்புமாறு மாநில அரசு நிறைவேற்றியுள்ள சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்குமாரு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு 03.07.2023 அன்று கடிதம் எழுதியிருந்தேன். இந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக ஆளுநர் மாளிகை 06.07.2023 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் உண்மைக்கு புறம்பான தகவல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன் என்று தெரிவித்திருந்தார்.
முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீதான ஊழல் வழக்கு தொடர்பாக உறுதிப்படுத்தபட்ட விசாரணை அறிக்கை கிடைக்கப் பெறவில்லை என்று ஆளுநர் மாளிகை தெரிவித்திருந்தது. மேலும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஊழல் வழக்கிற்கு இசைவாணை கேட்டு எந்த கோரிக்கையும் பெறப்படவில்லை என்று ஆளுநர் மாளிகை அலுலகம் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
ஆனால், முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியின் ஊழல் வழக்கு விசாரணை கோப்புகள் மொத்தமாக ஆளுநருக்கு 12.09.2023 அன்றே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கோப்பில், லஞ்ச ஒழிப்புத் துறையின் இறுதி விசாரணி அறிக்கை, விழிப்புணர்வு ஆணையத்தின் பரிந்துரை எல்லாம் அடங்கியுள்ளது. 298 நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்ட இறுதி விசாரணை அறிக்கையை பெற்றுக்கொண்டு கோப்பை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் கையெழுத்தும் போட்டுவிட்டு இன்று உறுதி செய்யப்பட்ட விசாரணை அறிக்கை கிடைக்கவில்லை என்று கூறுவது ஆளுநர் அலுவலகத்திற்கு அழகல்ல என்று சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
ஆளுநர் மாளிகை வாதப்படி வைத்துக்கொண்டால் கூட நான் நான் ஆளுநருக்கு கடிதம் எழுதும் வரை அந்த கோப்பு குறித்து எந்த விவரமோ, விளக்கமோ கேட்டு தமிழக ஆளுநரிடமிருந்து கடிதமும் வரவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி விஷயத்தில் இவ்வளவு வேகமாக அவரை நீக்க வேண்டும் என்று கடிதம் எழுதிய ஆளுநர் ஊழல் வழக்கின் நீதிமன்ற விசாரணையை தொடர அனுமதிக்காமல் - இசைவு ஆணையை நிறுத்தி வைத்து ஏன் இப்போது ஆதாரமற்ற ஒரு காரணத்தைச் சொல்கிறார் என்பதும் தெரியவில்லை.
இது மட்டுமில்லாமல், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஊழல் வழக்கில் இசைவு ஆணை கோரி லஞ்ச ஒழிப்புத் துறையின் இறுதி விசாரணை அறிக்கை, விஜிலென்ஸ் ஆணையத்தின் பரிந்துரை ஆகியவை அடங்கிய ஒரிஜினல் கோப்பு - ஆளுநருக்கு 15.5.2023 அன்றே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கோப்பை பெற்றுக் கொண்டதற்கு ஆளுநர் மாளிகை அலுவலகம் ஒப்புதல் கடிதமும் அளித்துள்ளது.
நிர்வாக நடைமுறைப்படி அனுப்பி வைக்கப்பட்ட அந்த கோப்பு ஆளுநர் மாளிகை அலுவலகத்துக்கு வரவில்லை என்று 53 நாட்கள் கழித்து ஆளுநர் மாளிகை அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருக்கும் செய்தி வியப்பாகவும் - விந்தையாகவும் இருக்கிறது.
ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் சட்டப்படியான பணிகள் செய்வதை கைவிட்டு - கட்சி அரசியல் பணிகளை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார் என்பதையே தனது அலுவலகத்திற்கு வந்த கோப்பை வரவில்லை என்று சொல்ல வைத்திருக்கிறது என்பதே உண்மை என்று தெரிகிறது.
அல்லது ஆளுநர் மாளிகை அலுவலகம் ஆளுநரின் கட்டுப்பாட்டில் இல்லையா என்ற கேள்வியை எழுப்புகிறது. ஆளுநர் மாளிகை அலுலக பத்திரிக்கை செய்தி ஆதாரமற்றது என்பதை எல்லாம் ஆதாரத்துடன் விளக்கி- முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், ரமணா ஆகியோருக்கு எதிரான குட்கா ஊழல் வழக்கில் நீதிமன்ற விசாரணையை தொடங்குவதற்கு தேவையான இசைவு ஆணையை விரைந்து வழங்குமாறு சி.பி.ஐ அமைப்பிடம் இருந்து 30.6.2023 அன்று மாநில அரசுக்கு வந்துள்ள கடிதம் பற்றிய விவரத்தையும் எடுத்துக் கூறி- முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் இசைவு ஆணை வழங்குவதை மேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக வழங்கிடுமாறு ஆளுநர் அவர்களுக்கு மீண்டும் இன்று கடிதம் எழுதியிருக்கிறேன்” என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
மேலும், முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியின் ஊழல் வழக்கு விசாரணை தொடர்பான கோப்புகளை ஆளுநர் மாளிகை அலுவலகம் பெற்றதற்கான ஒப்புகைச் சீட்டை தமிழக அரசு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.