பால்வளத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் ராஜகண்ணப்பன், தனது மகன்கள் மூலம் சுமார் ரூ. 411 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக, அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட மற்றும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மறைத்து தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் அறப்போர் இயக்கம் அவதூறு பரப்புவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் சார்பாக வழக்கறஞர் சரவணன், அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சர்ச்சைக்குள்ளான இடம் அரசு நிலம் அல்ல தனியாருக்கு சொந்தமானது என நீதிமன்றத்தின் தீர்ப்பு இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் அமைச்சர் தரப்பினர் உறுப்பினர்களாக இருப்பதால், காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தவறான தகவல்கள் பகிரங்கமாக பரப்பப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் என்ற முறையில், அறப்போர் இயக்கம் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.